காங்கேயம்: காங்கேயம், மறவபாளையம் ஊராட்சிக்குட்பட்ட செம்மங்குளிபாளையம் பகுதியில், சட்டவிரோதமாக கல்குவாரி இயங்குவதாக கூறி, பொக்லைன் இயந்திரம், டிராக்டரை பொதுமக்கள், விவசாயிகள் சிறை பிடித்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, மறவாபாளையம், செம்மன்குழிபாளையத்தில் சந்தோஷ் என்பவர் கல்குவாரி, வேலவா கிரஷர் நடத்தி வருகிறார். கடந்த 2018 முதல், இந்தாண்டு மார்ச் 22 வரை செயல்பட அனுமதி பெற்றுள்ளது. அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் கடந்த ஆறு மாதங்களாக செயல்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று கடந்த, 18 முதல் உரிமம் பெற்று கல்குவாரி இயங்கி வந்துள்ளது. நேற்றுடன் கல்குவாரி உரிமம் முடிவடைகிறது.
இதற்கிடையில், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின்
அனுமதி பெறாமல், இயங்கி வந்ததாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் குவாரியிலிருந்த டிராக்டர், பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கேயம் தாசில்தார் புவனேஷ்வரி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதில், குவாரிக்கு இன்று வரை அனுமதி உள்ளது என்றும், ஆகவே உயர் அதிகாரிகளின் உத்தரவு பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் தெரிவித்தார். ஆனால், நடவடிக்கை எடுத்தால்தான், இந்த இடத்தை விட்டு கலைந்து செல்வோம்; இல்லையேல் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.