ஊதியூர்: ஆடு, மாடு, கன்று வரிசையில் ஊதியூர் மலையில் பதுங்கியிருக்கும் சிறுத்தை துாக்கிச் சென்ற விலங்குகளின் பட்டியலில், நேற்று வளர்ப்பு நாய் இணைந்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.
கடந்த, 20 நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அடுத்த தாயம்பாளையத்தில் உள்ள ஆட்டுப் பட்டியில் சிறுத்தை புகுந்து, ஆட்டை துாக்கிச் சென்றது. அடுத்தடுத்து மலையை சுற்றியுள்ள தோட்டங்களில் புகுந்து மாடு, கன்று என துாக்கிச் சென்றது. காங்கேயம் வனச்சரக அலுவலர் தனபால் தலைமையில் வனத்துறையினர் ஊதியூரில் முகாமிட்டு கூண்டுகளில் ஆடுகளை கட்டி வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நேற்று வழக்கமான பாதையில் செல்லாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு, ஊதியூர் மலையின் வடக்கு பகுதி அடிவாரத்தில் உள்ள அகஸ்டின் என்பவரது தோட்டத்திற்கு காலை, 7:00 மணியளவில் வந்த சிறுத்தை, அவரது நாயை கண்ணிமைக்கும் நேரத்தில் கடித்து இழுத்துக் கொண்டு மலைக்குள் சென்றுவிட்டது.
இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். காங்கேயம் வனச்சரக அலுவலர் தனபால் கூறுகையில்,''சிறுத்தையை பிடிக்க கூடுதலாக கூண்டுகளை வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.