கரூர்: கரூர் - பசுபதிபாளையம் இடையே அமராவதி ஆற்றுப்பாலத்தில் சேதமடைந்துள்ள, தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் நகரம், பசுபதிபாளையம் பகுதிகளை இணைக்கும் வகையில், ஐந்து சாலை பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே சில ஆண்டுகளுக்கு முன்பு, புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டில்
உள்ளது.
புதிய பாலம் கட்டப்படுவதற்கு முன்பு, அமராவதி ஆற்றை, பழைய தரைப்பாலம் வழியே பொதுமக்கள் கடந்து சென்று வந்தனர். நாளடைவில், தரைப்பாலம் சேதமடைந்து முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தபோது தரைப்பால சாலை, அடித்து செல்லப்பட்டு விட்டது. தற்போது, தரைப்பாலத்துக்காக அமைக்கப்பட்ட, ராட்சத குழாய்கள் மட்டும் உள்ளன.
அவசர காலங்களில் வாகனங்கள் எளிதாக செல்லவும், புதிய பாலத்தில் போக்குவரத்தை நெரிசலை குறைக்கும் வகையிலும், அமராவதி ஆற்றின் தரைப்பாலத்தை சீரமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம்.