தான்தோன்றிமலையில்
குடிநீர் தட்டுப்பாடு
கரூர், தான்தோன்றிமலை பகுதியில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. ஆனால், நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தான்தோன்றிமலை மட்டுமின்றி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும்
குடிநீர் வழங்கவும், தான்தோன்றிமலை பகுதியில் மண் சாலைகளை,
தார் சாலைகளாக மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குப்பைக்கு தீ வைப்பதால்
வாகன ஓட்டிகள் பாதிப்பு
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமானுாரில் இருந்து வடக்கு காந்தி கிராமம் செல்லும் சாலையோரத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனை, மாநகராட்சி நிர்வாகத்தினர் முறையாக அள்ளுவது கிடையாது. இதனால் குப்பை, சாலையில் பரவி கிடக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சிக்கு புகார் சென்றவுடன், குப்பை தீயிட்டு கொளுத்தப்படுகிறது. இதனால், எழும் புகை காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குப்பையை எரிக்காமல் முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அடிக்கடி பழுதாகும்
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளது. இதில், பொதுமக்கள் குடிநீர் அருந்தி வந்தனர். இந்நிலையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அடிக்கடி பழுதடைவதால், பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
மேலும், அங்கு டம்ளர்களும் இல்லை. இதனால் கையால் குடிநீர் அருந்தி சென்றனர். எனவே, வெயில் காலத்தை கருத்தில் கொண்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் தாகம் தணிக்க, போதுமான அளவு குடிநீர் வைக்கவும், குடிநீர் குழாய் அருகே டம்ளர்களை வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மன் கோவிலுக்கு
பால்குட ஊர்வலம்
குளித்தலை, பெரியபாலம், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள், நேற்று, தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
தெலுங்கு புத்தாண்டை ஒட்டி, குளித்தலை, பெரியபாலம் பகுதி மக்கள், பரிசல் துறை காவிரி ஆற்றில் தீர்த்த குடம், பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, பெரியபாலத்தில் உள்ள வாசுகி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு பால், தீர்த்தம் ஊற்றி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்டனர். பால்குடம், தீர்த்த குட ஊர்வலத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய பாரத திட்டஎழுத்தறிவு தேர்வு
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாத 20 பேரை கண்டறிந்து அவர்களுக்கு எழுத்தறிவு அடிப்படை மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க தன்னார்வலர்கள் மூலம் கடந்த 3 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வில் 20 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தன்னார்வலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா ஆகியோர் தேர்வை நடத்தினர்.
கோமாரி நோய்
தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள குந்தாணிபாளையத்தில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. நொய்யல் கால்நடை மருந்தக மருத்துவர் உஷா தலைமையில் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, 200-க்கும் மேற்பட்ட பசு, எருமை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.
பின், விவசாயிகளிடம், கோமாரி நோய் தாக்குதலிலிருந்து, எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில், ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
எள் சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குழந்தைப்பட்டி, வரகூர், சரவணபுரம், வயலுார், திருமேனியூர், பாப்பக்காப்பட்டி, மலையாண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக எள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது எள் செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் பிடித்து வருகின்றன. எள் சாகுபடிக்கு குறைந்த தண்ணீர் போதுமானது என்பதாலும், இதில் ஓரளவு வருமானம் கிடைப்பதாலும், எள் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புல்லட் மோதி தொழிலாளி படுகாயம்
மகாதானபுரம் அருகே, கம்மநல்லுார் மேல தெருவை சேர்ந்தவர் குமார், 47,
கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில், மேட்டு மகாதானபுரம் - பழைய ஜெயங்கொண்டம் சாலையில் நடந்து சென்று
கொண்டிருந்தார்.
அப்போது மேட்டு மகாதானபுரம், தாய் - சேய் நல விடுதி அருகே, அதே ஊரை சேர்ந்த பெரியசாமி, 38, அதிவேகமாக ஓட்டி வந்த புல்லட், குமார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குமார், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின்படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத
முதியவர் சடலம் மீட்பு
குளித்தலை கடம்பர்கோவில் முன் பகுதியில், 10க்கும் மேற்பட்ட முதியோர், கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் உணவை வாங்கி உட்கொண்டுவிட்டு, கோவில் அருகில் திறந்த வெளி மண்டபத்தில் வசித்து
வருகின்றனர்.
இந்நிலையில் கடம்பர்கோவில் கிழக்கு வீதியில் உள்ள திறந்த வெளி அரங்கத்தில், நேற்று காலை, அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் இறந்து கிடந்தார். பொது மக்கள் கொடுத்த தகவலின் படி, வி.ஏ.ஓ.,முத்துக்குமார் குளித்தலை போலீசில் புகார் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து, போலீசார், வி.ஏ.ஓ., மற்றும் கிராம
உதவியாளர்கள் குமரேசன், ரத்தினசாமி, நகராட்சி சுகாதார பணியாளர்கள், முதியவரின் சடலத்தை, காவிரி ஆற்று படுகையில் அடக்கம்
செய்தனர்.