செய்திகள் சில வரிகளில்... நாமக்கல் | நாமக்கல் செய்திகள்| News in a few lines... Namakkal | Dinamalar
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
Added : மார் 23, 2023 | |
Advertisement
 

25ல் வெண்ணந்துாரில்
பா.ஜ., அலுவலகம் திறப்பு
வெண்ணந்துாரில், பா.ஜ., ஒன்றிய அலுவலக கட்டட திறப்பு விழா வரும் மார்ச், 25ல் நடக்கிறது. வெண்ணந்துார் ஒன்றிய பா.ஜ., அலுவலக கட்டட திறப்பு விழா வரும், 25 காலை, 10:00 மணியளவில் நடக்கிறது. மாநில துணை தலைவரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான துரைசாமி, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளும் அணி பிரிவு நிர்வாகிகளும் கிளை கமிட்டி நிர்வாகிகளும் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இந்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெண்ணந்துார் ஒன்றிய தலைவர் அருள் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


ரயில் மோதி வாலிபர் பலி
பள்ளிபாளையம் அருகே, வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன், 22; மாற்றுத்திறனாளி.
குமரேசன், நேற்று மாலை, 5:00 மணிக்கு காவிரி பகுதியில் ரயில்பாதையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் மோதி துாக்கி வீசப்பட்டதில் இறந்து விட்டார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு
புதுச்சத்திரத்தில், 'எண்ணும் எழுத்தும் திட்டம்' குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், புதுச்சத்திரத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம், கடந்த ஓராண்டாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதலாமாண்டு நிறைவையடுத்து, எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி, வட்டாரத்துக்குட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவர்களால் கொண்டாடப்பட்டது. மாணவர்களின் பெற்றோர் பங்கேற்று, மாணவர்களின் செயல்பாடுகளை கண்டு பாராட்டினர். பஞ்., தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்று, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரசேகரன், சுப்பிரமணியம், வட்டார
வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் அம்ருனிஷா பேகம் உட்பட
ஆசிரிய பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.

லாட்டரி விற்றவர் கைது
ராசிபுரத்தில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ராசிபுரம் அருகே, திருமலைப்பட்டி அடுத்த செவ்வாய்பட்டி பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் சந்தோஷ், 26; ராசிபுரம், காட்டூர் ரோடு பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக, ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராசிபுரம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த
சந்தோஷை கைது செய்து, அவரிடமிருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ய பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர்.

இருகிராம மக்களிடையே
அமைதி பேச்சுவார்த்தை
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில், வடகரையாத்துார் மற்றும் கரப்பாளையத்தை சேர்ந்த, இரண்டு கிராம மக்களிடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறியதாவது:
நித்யா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யப்பட்டுள்ளது. கொலை வழக்கை தவறாக சித்தரித்து, மர்ம நபர்கள் வெல்ல ஆலய குடிசைகளுக்கு தீ வைத்துள்ளனர்.
இது சம்பந்தமாக தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேற்கொண்டு அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டும் என கூறினார். எஸ்.பி., கலைச்செல்வன், டி.எஸ்.பி., கலையரசன், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா கலந்து கொண்டனர்.

பூசாரி தற்கொலை
பெரம்பலுார் மாவட்டம், அரும்பாலுார் அடுத்த பூலாம்பாடி பகுதியை சேர்ந்த பெரியண்ண கவுண்டர் மகன் அத்தியப்ப கவுண்டர், 90; இவருடைய மனைவி இறந்து விட்டதால், கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள
பெரியாண்டவர் கோவிலில் பூசாரி பணி செய்து வந்தார். கோவில் நிர்வாகம் கொடுத்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
வயதான நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை, பெரியாண்டவர் கோவில் கருவறைக்கு பின்புறம் அங்காளம்மன் பதிக்கு முன்பு உள்ள வேப்பமரத்தில் அத்தியப்ப கவுண்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பாலம் அமைக்க ஆய்வு
குமாரபாளையம் கிழக்கு காலனி, சுள்ளிமடைதோட்டம் பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இங்குள்ள நகராட்சி பூங்கா அருகில், கழிவு நீர் கால்வாய் உள்ளது. இதன் மறுகரையில் ஆனங்கூர் சாலை இருப்பதால், இந்த இடத்தில் பாலம் அமைத்தால் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நுால், லாரிகள் மூலம் கொண்டு செல்ல எளிதாக அமையும். மேலும், மாணவர்கள் ஆனங்கூர் சாலை வழியாக, விரைவில் கல்வி நிறுவனங்களுக்கு செல்லவும், ஆம்புலன்ஸ்கள் செல்லவும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
அதனால் இப்பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, சேர்மன் விஜய்கண்ணன், பொறியாளர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர். மாவட்ட செயலர் மதுரா செந்தில், நகர தி.மு.க., செயலர் செல்வம் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

வெண்ணந்துாரில்
கிராம சபை கூட்டம்
வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, 24 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம், உலக தண்ணீர் தினமான நேற்று நடந்தது. வெண்ணந்துார் அருகே, உள்ள மின்னக்கல் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட மகளிர் திட்ட அலுவலக உதவி திட்ட அலுவலர் செல்வி, வெண்ணந்துார் பி.டி.ஓ., பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா சீனிவாசன் ஆகியோர் கூட்டத்தை நடத்தினர்.
கூட்டத்தில், நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால் நீர்நிலைகளை துார்வாரி பாதுகாக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அங்காளம்மனுக்கு
தங்க கவசம்
யுகாதி விழாவையொட்டி, பளைய
பாளையம் அங்காளம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
எருமப்பட்டி அருகே, பிரசித்தி பெற்ற பளையபாளையம் அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் யுகாதி விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவித்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன்படி, நேற்று, யுகாதி விழாவையொட்டி அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

25ல் தி.மு.க., செயற்குழு கூட்டம்
'வரும், 25ல், நாமக்கல்லில் தி.மு.க., செயற்குழு கூட்டம் நடக்கிறது. கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என, கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், வரும், 25ல், காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் நளா ஓட்டலில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார்.
கூட்டத்தில், கழக முன்னாள் தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின், நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட செயலாளர் கூட்டத்தில், கட்சி தலைவர் ஸ்டாலினால் அறிவுறுத்தப்பட்ட பணிகளை மேற்கொள்வது, கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்தும்
விவாதிக்கப்படுகிறது.
தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்,
எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, முன்னாள் எம்.பி., -
எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காப்பீடு திட்ட பதிவுக்கு
பணம் வசூலிப்பதாக புகார்
பள்ளிபாளையத்தில், அரசு காப்பீடு திட்டத்திற்கு பணம் வசூல் செய்யப்படுவதால், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிபாளையம் அடுத்த கண்டிபுதுார் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 50, என்பவர் போலீசில், நேற்று முன்தினம் இரவு, புகாரளித்தார்.
அந்த புகாரில், 'மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டம் பதிவு செய்கிறோம்; நீங்கள் உங்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு எண் எடுத்துக்கொண்டு பேப்பர் மில் சாலை பகுதிக்கு வாருங்கள்' என, மொபைலில் அழைத்தனர். நான் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பதிவு செய்தேன்.
இதற்கு, 500 ரூபாய் பணம் கேட்கின்றனர். இந்த பதிவு இலவசம் தானே, எதற்காக பணம் கேட்கிறீர்கள் என, நான் கேட்டேன். இதனால் என்னை மிரட்டும் தொனியில் பேசினர். இது போன்ற ஏமாற்று வேலையில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

உலக தண்ணீர் தினத்தையொட்டி
விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, பாரம்பரிய சிலம்ப கலையை ஊக்குவிக்கம் வகையிலும், மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில், விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நாமக்கல்லில் நடந்தது.
மாவட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்க செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தலைவர் ராஜேந்திரகுமார், நகரவை துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் கிருத்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரு யுவகேந்ரா மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் தில்லை சிவகுமார், மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்தார். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய ஓட்டம், மோகனுார் சாலை, கொண்டிசெட்டிப்பட்டி அம்மா பூங்காவில் முடிந்தது. மாரத்தான் ஓட்டத்தில், சிலம்பம் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்
சான்றிதழ் மற்றும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.

நாமக்கல் நாயுடுகள் நலச்சங்கம் சார்பில்
யுகாதி, வெள்ளி விழா கொண்டாட்டம்
தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, நாமக்கல் நகரில் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் யுகாதி வெள்ளி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில், நேற்று தெலுங்கு வருட பிறப்பு மற்றும் 25ம் ஆண்டு வெள்ளி விழா, யுகாதி பெருவிழா நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள பாவை மஹாலில் நடந்தது. முன்னதாக, சந்தைபேட்டைபுதுார், செலம்ப கவுண்டர் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, நாயுடு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பேரணியாக பாவை மஹாலுக்கு சென்றனர். தொடர்ந்து காலை, 8:30 முதல் மதியம், 2:00 மணி வரை நாயுடு சமூக மணமாலை நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியம், பேச்சு, மாறுவேடம், பாட்டு போட்டி, மகளிருக்கான கோலப்போட்டி நடத்தப்பட்டது. கடந்த கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி.,
மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற, சமுதாய மாணவ, மாணவியருக்கு கல்வி
உதவித்தொகை வழங்கப்பட்டது.
சங்க தலைவர் வெங்கடசுப்ரமணியன், செயலாளர் நாராயணன், பொருளாளர் தங்கவேல், இளைஞரணி தலைவர் சக்திவெங்கடேஷ் கவுரவ ஆலோசகர்கள் விஜயராகவன், குருசாமி, மாவட்ட மகளிரணி தலைவர் ரேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மகளிர் தினவிழா
எலச்சிபாளையம் அடுத்த பெரியமணலி கிராமத்தில், நெஸ்ட் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நேற்று, தனியார் திருமண மண்டபத்தில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. முக்கிய வீதிகள் வழியே, பெண்கள் முன்னேற்றம் குறித்து பேரணி நடந்தது.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், பெண்களுக்கு தொழில் வசதி ஏற்படுத்தி முன்னேற்றம் அடைய செய்தல், வரதட்சணை கொடுமையை ஒழித்தல் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது. இந்நிறுவனத்தின் இயக்குனர் லட்சுமி, எஸ்.ஐ., வேலுமணி, ஊராட்சி மன்ற தலைவர் சேகர், பி.டி.ஓ., புஷ்பராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் பிளேஷ்மென்ட் டே-2023 நிகழ்ச்சி
மல்லசமுத்திரம், மஹேந்ரா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி கலையரங்கில், 'பிளேஷ்மென்ட் டே-2023' நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி மேலாண் இயக்குனர் மஹா அஜய் பிரசாத் தலைமை வகித்தார். பேச்சாளர் கோபிநாத் கலந்துகொண்டு, ௧,௨௦௦ மாணவ, மாணவியருக்கு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகை யில்,
''இன்றைய இளைய சமூகத்தினர் எதையும் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும்; எதிர்காலத்தை தன்னுடைய பலத்தின் மீது கட்டமைக்க வேண்டும்; வாழ்வில் கிடைக்க பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், தன்னுடைய வாழ்வியலின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் வகையில், மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர் கற்றதுடன் தங்களுடைய அணுகுமுறை தொழிற்திறன், பேச்சுத்திறன், ஒழுக்க நெறி, கற்றலின் பயன், தொடர்ந்து கற்றல் மற்றும் தொழிற்நுட்ப அறிவை வளர்த்து, தொடர் முயற்சியால் இலக்கை அடைய வேண்டும்,'' என்றார்.
கல்லுாரி செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், குழும கல்லுாரி முதல்வர்கள் மஹேந்ரா கவுடா, இளங்கோ, செந்தில்குமார், புல முதல்வர் சண்முகம், வேலைவாய்ப்பு இயக்குனர்
சரவணராஜ், ஒருங்கிணைப்பாளர் பிரபு மணிகண்டன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

கொல்லிமலை அனைத்து வணிகர் சங்க
உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
கொல்லிமலை, மார்ச் 23-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், இணைப்பு சங்கமான, கொல்லிமலை அனைத்து வணிகர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, கொல்லிமலை செங்கரையில், நேற்று நடந்தது.
நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வழிகாட்டுதல்படி நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் வருணன் தலைமை வகித்தார்.
செயலாளர் பூபதி வரவேற்றார். பொருளாளர் தென்னவன் முன்னிலை வகித்தார். முதல் கட்டமாக, செங்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை யும்,
சான்றிதழும் வழங்கப்பட்டது.
அப்போது, அனைத்து வணிகர்களும், தமிழக அரசின் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைந்து, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற அறிவுறுத்தப்பட்டது. மேலும், மே, 5ல், ஈரோட்டில் நடக்கும் மாநில மாநாட்டில், வணிகர்கள் குடும்ப உறுப்பினர்களோடு திரளாக கலந்துகொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
'இந்த நிகழ்ச்சி, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, குண்டூர் நாடு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு, அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்' என, சங்க நிர்வாகிகள்
தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X