மோகனுார்: குடிநீர் கேட்வால்வு திறந்து தண்ணீர் சாலையில் வெளியேறி, சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது. காவிரி ஆற்றில் சொற்ப அளவே தண்ணீர் வரும் நிலையில், லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருவது, சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
நாமக்கல் நகராட்சியில், 39 வார்டுகளில், 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, மோகனுார் மற்றும் ப.வேலுார் அடுத்த ஜேடர்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம், தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. நகராட்சி மக்களுக்கு, ஒரு சில பகுதிகளில், தினமும், இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து, ஐந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, மேட்டூர் அணையில், 103 அடி தண்ணீர் உள்ள நிலையில், 1,500 கன அடி நீர் குடிநீர் தேவைக்காக திறந்து
விடப்படுகிறது. அதனால், பல்வேறு பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மோகனுார் பழைய தாலுகா அலுவலகம் அருகில் உள்ள நாமக்கல் கூட்டு குடிநீர் திட்ட 'கேட்வால்வு' திறந்து தண்ணீர் சாலையில் வெளியேறி, சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஒரு வாரத்துக்கும் மேல் சாலையில் வெளியேறி சாக்கடையில் கலந்து வருவதால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.