நாமக்கல்: 'சேந்தமங்கலத்தில் நாளை, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், 'மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்' வருவாய் கோட்ட அளவில், மாதந்தோறும் நடத்தப்படுகிறது.
அதையடுத்து, நாளை காலை, 10:00 மணிக்கு, சேந்த
மங்கலம் தாலுகாவில்,
ஆர்.டி.ஓ., மஞ்சுளா தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இந்த சிறப்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒற்றைச்சாளர முறையில் சிறப்பு மருத்துவ முகாமும் நடக்கிறது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த
மாற்றுத்திறனாளிகள், இந்த சிறப்பு குறைதீர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.