ப.வேலுார்: இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த சம்பவத்தையடுத்து, வடமாநிலத்தவரின் குடிசைகளுக்கு தொடர் தீ வைக்கும் சம்பவம் நடந்து வருவது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த ஜேடர்பாளையம், கரப்பாளையத்தை சேர்ந்த விவேகானந்தர் மனைவி நித்யா, 28; இவர் கடந்த, 11ல் ஆடு மேய்க்க சென்றவர், வீட்டின் அருகே உள்ள ஓடையில், அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். டி.எஸ்.பி., கலையரசன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக, அப்பகுதியில் உள்ள கரும்பாலையில் பணிபுரிந்து வந்த, 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சிறுவன், நித்யாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த சிறுவன் அளித்த தகவல்படி, மேலும் மூவரை பிடித்து விசாரணை மட்டும் நடத்தி விட்டு, அவர்கள் மீது எந்த வழக்கும் பதியவில்லை.
இந்நிலையில், ஜேடர்பாளையம் அருகே, சரளை மேட்டை சேர்ந்த சக்திவேல், 70, புதுப்பாளையத்தை சேர்ந்த சதாசிவம், 60, ஆகியோர் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகின்றனர்.
அந்த ஆலையில் வடமாநில தொழிலாளர்கள், குடிசை அமைத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த குடிசைகளுக்கு கடந்த, 16ல் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். இதுதொடர்பான வழக்கில், நித்யாவின் உறவினர்களான, 6 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதேபோல், நேற்று முன்தினம் இரவு, ஜேடர்பாளையம் அருகே,
சரளைமேடு பகுதியை சேர்ந்த துரைசாமி, 57, என்பவரின் வெல்ல ஆலையில் பணிபுரிந்து வரும் வட மாநிலத்தவர்களின், பத்துக்கும் மேற்பட்ட குடிசைகளுக்கும், மூன்று டிராக்டர்களுக்கும், மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இதேபோல், திடுமல் ரோடு பகுதியில் ஆலை கொட்டகை நடத்தி வரும் பழனிசாமி, 55, என்பவரின் வீட்டுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்ததில், அவரது வீட்டிலிருந்த ரொக்க பணம், பத்திரங்கள், தங்க நகைகள் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இதையடுத்து, நேற்று காலை, கலெக்டர் ஸ்ரேயா சிங், எஸ்.பி., கலைச்செல்வன் ஆகியோர், நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள்
கூறியதாவது:
நித்யா கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை போலீசார் மறைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தனி ஒருவனாக அந்த சிறுவன் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை நித்யாவின் உறவினர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்.
நித்யாவின் கொலைக்கு பின் இப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். எனவே, நித்யா கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.