ப.வேலுார்: ஜேடர்பாளையம் அருகே, அ.தி.மு.க., முன்னாள் பஞ்., தலைவர் வீட்டில், நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே, வடகரையாத்துாரை சேர்ந்தவர் வேலுசாமி; அ.தி.மு.க., முன்னாள் பஞ்., தலைவர். இவரது மகன் வைத்தியநாதன், 50; இவரது மனைவி பூங்கொடி, 40, வடகரையாத்துார் முன்னாள் பஞ்., தலைவர். நேற்று முன்தினம் இரவு, வைத்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, நள்ளிரவு வீட்டிற்கு பின்புறமாக வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை, கதவு மற்றும் சமையலறை பகுதியிலிருந்த ஜன்னல்கள் மீது வீசியுள்ளனர். பாட்டில் உடையும் சத்தம் கேட்டு, வைத்தியநாதன் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது, அங்கு நின்றிருந்த மர்ம நபர்கள் தப்பித்து ஓடினர்.
மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டுகளால், மர ஜன்னல்கள், ஸ்கிரீன் துணிகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைத்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து, ஜேடர்பாளையம் போலீசாருக்கு, வைத்தியநாதன் தகவல் தெரிவித்தார். எஸ்.பி., கலைச்செல்வன், டி.எஸ்.பி., கலையரசன் மற்றும் போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, வைத்தியநாதன் கூறுகையில், ''ஆடு மேய்க்க சென்று, கொலையான நித்யா எனக்கு உறவினர் முறையாகும்; நித்யா இறப்புக்கு பின், அவரது குடும்பத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தேன்; குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தினேன். இதை பிடிக்காத நபர்கள், என் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்,'' என்றார்.