ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில், நள்ளிரவில் ரெய்டு நிறைவு
பெற்றது.
ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றுபவர் சிவக்குமார். ஈரோடு பெரியார் நகரில் உள்ள இவரது வீட்டில் நேற்று முன்தினம் மாலை, 3:45 மணியளவில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் நுழைந்தனர்.
இந்த அதிரடி சோதனை, விசாரணை நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நீடித்தது. இரவு, 12:50 மணிக்கு விசாரணை, ரெய்டை முடித்து கொண்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் அங்கிருந்து கிளம்பினர்.
இது குறித்து, ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறியதாவது:
நள்ளிரவு, 12.50 மணி வரை விசாரணை, ரெய்டு நடத்தினோம். அதன் பின் இதுகுறித்து அறிக்கை தயார் செய்து கையெழுத்து பெற்றோம். 10 ஆவணங்களை கமிஷனர் வீட்டில் இருந்து கைப்பற்றி உள்ளோம். பணம் எதுவும் கிடைக்கவில்லை. 2015-16ல் பல்லாவரம் நகராட்சி கமிஷனராக சிவக்குமார் பணியில் இருந்த போது, நடந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பான விசாரணை, ரெய்டு தான் தற்போது
நடந்தது.
விசாரணை அறிக்கை, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவிப்போம். இவ்விவகாரத்தில், இனி சென்னை லஞ்ச ஒழிப்பு துறையினர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வர். ஈரோடு மாநகராட்சி கமிஷனர் மீது, ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு எதுவும் பதிவு
செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.