கிருஷ்ணகிரி: தமிழகத்தில், 5,000 ஹெக்டேரில் சாகுபடியாகும் மரவள்ளிக் கிழங்கிற்கு மானியம் வழங்கும் அரசு, 50 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடியாகும்
மா சாகுபடிக்கு எந்த மானியமும், இழப்பீடும் வழங்குவதில்லை. அதற்கான எந்த அறிவிப்பையும் இந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்காதது, மா விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
என, அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சவுந்தர்ராஜன் கூறினார்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், மா சாகுபடியில் எப்போதும் முதலிடத்தில் உள்ளது. மாவட்டத்தில், 50 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி நடக்கிறது.
இதில், பெங்களூரா, பீத்தர், மல்லி, அல்போன்சா, மல்கோவா, நீலம்,
செந்துாரா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் மா சாகுபடி நடக்கிறது.
மாங்கூழ் தயாரிப்பு
விற்பனைக்கு போக மீதமுள்ள மாங்கனிகள் மாங்கூழ் தயாரிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில், 80க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் மாங்கூழ் தயாரித்து வந்த நிலையில், தற்போது, 20 நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் மாங்கூழ், துபாய், சவுதி அரேபியா, சைனா, ஜெர்மன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட, 62 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
ரூ.100 கோடி அன்னிய செலாவணி
மாவட்டத்தில், 50 ஆயிரம் குடும்பங்கள் மா உற்பத்தி செய்து வரும் நிலையில், நேரடியாகவும், மறைமுகமாகவும், 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.
மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மாங்கூழ் தனிச்சுவை மற்றும் தனித்தன்மை கொண்டு இருப்பதால் ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வரை
அன்னிய செலாவணியை பெற்றுத் தருகிறது.
கடந்த, நான்கு ஆண்டுகளாக மா விவசாயிகளுக்கு நிலையான விலை கிடைக்காமலும், நோய் தாக்குதலாலும், பூச்சிக்கொல்லி மருந்து விலை ஏற்றத்தாலும், மா விவசாயத்தை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், மாங்கனி நகர் என்ற பெருமையை கிருஷ்ணகிரி மாவட்டம் இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இது குறித்து, அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர், சவுந்தர்ராஜன்
கூறியதாவது:
மற்ற மாநிலங்களில் மா விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு இழப்பீடாக, 5 ரூபாய் வழங்குகின்றனர். இதுபோன்ற எந்த அறிவிப்பும் தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.
கடந்தாண்டு, 1,000 ரூபாய்க்கு வாங்கிய பூச்சிக்கொல்லி மருந்து தற்போது, 1,800 என விற்கப்படுகிறது. பல விவசாயிகள் கடன் வாங்கி மருந்தை வாங்கினாலும், அதை அடிப்பதற்கு உரிய நேரத்தில் ஸ்பிரேயர் கிடைப்பதில்லை. அதற்குள் மாம்பூக்கள் கடுமையாக பாதிக்கின்றன.
எவ்வளவு செலவு செய்து மருந்து அடித்தாலும், பூச்சிகள் அழிவதில்லை. எனவே, மா விவசாயத்தை பாதுகாக்க, அரசே பூச்சிக்கொல்லி மருந்தை இலவசமாக வழங்கி, நவீன முறையில் மருந்து அடிக்க கருவி வழங்க வேண்டும்.
விலையில்லை
மா விவசாயிகளை காக்க, முதலில் இழப்பீடு வழங்க வேண்டும். மாவிற்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கடந்தாண்டு முத்தரப்பு கூட்டத்தில் ஒரு கிலோவிற்கு, 25 ரூபாய் வழங்க வேண்டும் என்று
முடிவெடுத்தனர்.
ஆனால், மாங்கூழ் தயாரிப்பாளர்கள், 17 முதல், 18 ரூபாய் மட்டுமே வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்ட, மா சீசன் முடிந்த பிறகு, வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மாங்காய்களுக்கு கிலோவிற்கு, 75 ரூபாய் வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யும் மாங்கனிகளில் தயாரிக்கும் மாங்கூழுக்கு சர்க்கரை சேர்க்க வேண்டியதில்லை. இயற்கையிலேயே சர்க்கரை அளவு அதிகமுள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களில் தயாரிக்கும் மாங்கனிக்கு, சர்க்கரை சேர்க்க வேண்டும். ஆனாலும், கிருஷ்ணகிரி மாவட்ட மாங்கனிக்கு மட்டும் குறைவான விலையே கொடுக்கின்றனர்.
மானியம் இல்லை
தமிழகத்தில், 5,000 ஹெக்டேரில் சாகுபடியாகும் மரவவள்ளிக் கிழங்கிற்கு மானியம் வழங்கும் அரசு, 50 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடியாகும் மாங்கனிக்கு எந்த மானியமும், இழப்பீடும் வழங்குவதில்லை. அதற்கான எந்த அறிவிப்பையும் இந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்காதது, மா விவசாயிகளுக்கு
பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.