'சிப்காட்'டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததால் பஞ்., ஆபீஸ் முன் மக்கள் தர்ணா போராட்டம் | நாமக்கல் செய்திகள்| Peoples dharna protest in front of Panj. office due to non-passing of resolution against Sipkot | Dinamalar
'சிப்காட்'டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததால் பஞ்., ஆபீஸ் முன் மக்கள் தர்ணா போராட்டம்
Added : மார் 23, 2023 | |
Advertisement
 


நாமக்கல்: 'சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்ற பொதுமக்களின் கோரிக்கையை புறக்கணித்ததால், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய கிராம பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசு, தொழில்துறை மூலம், 'சிப்காட்' அமைப்பதற்கு, நிலம் எடுக்க ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.

கோரிக்கை மனு
இதற்கு, சிப்காட் எதிர்ப்பு குழு சார்பில், 'உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடக்கும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில், விளை நிலங்களில் சிப்காட் வருவதை தவிர்க்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, சம்பந்தப்பட்ட ஐந்து கிராம பஞ்., தலைவர்களை நேரில்
சந்தித்து, சில நாட்களுக்கு முன் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வளையப்பட்டி, அரூர் பஞ்.,களில், நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. அரூர் பஞ்.,ல், ஜன., 26ல் நடந்த கிராம சபை கூட்டத்தில், சிப்காட் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அவற்றின் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், நேற்று நடந்த கூட்டத்தில், மீண்டும் அந்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
கோபமடைந்த மக்கள்
அப்போது அங்கிருந்த சிலர், 'சிப்காட் அமைக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். அதனால், பஞ்., தலைவர், செயலாளர், அதிகாரிகள், எந்த தீர்மானத்தையும் எழுதாமல் காலம் தாழ்த்தினர். கோபமடைந்த பொதுமக்கள், 'கிராமசபை கூட்டம் என்பது, பொதுமக்களால் கொண்டுவரப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் சொல்வதை தீர்மானங்களாக நிறைவேற்றக்கூடாது' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாதியில் முடிந்த கூட்டம்
அதற்கு, பஞ்., செயலாளர் ரவிச்சந்திரன், ''அரசு அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதை தான் எழுதுவோம்,'' என, கூறினார். ஆத்திரமடைந்த பொதுமக்கள், பஞ்., அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், 'பொது மக்களின் கோரிக்கையை தீர்மானமாக எழுத முடியாது' எனக்கூறிய அரூர் பஞ்., செயலாளர் கருப்பண்ணன், தீர்மான நோட்டை எடுத்துக் கொண்டு, அலுவலகத்துக்குள் ஓட்டம் பிடித்தார். அவற்றை படம் பிடித்த நிருபர்களின் கேமராவை பறிக்க முயன்றதுடன், அவர்களுக்கு மிரட்டலும் விடுத்தார். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, சிப்காட்டிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றாமல், கிராமசபை கூட்டம் பாதியில் முடிந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X