கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, காதல் திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்ட ஜெகனின் உடல் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், கொலை செய்தவரின் வீட்டை, ஜெகனின் உறவினர்கள் சூறையாடினர்.
கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன், 25; டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அவதானப்பட்டியை அடுத்த புழுகான்கொட்டாயை சேர்ந்தவர் சரண்யா, 23; உறவினர்களான இவர்கள், பள்ளிப்பருவத்திலிருந்து காதலித்தனர். வீட்டின் எதிர்ப்பு மீறி சரண்யா, கடந்த ஜன., 26ல் ஜெகனை திருமணம் செய்தார். இந்த ஆத்திரத்தில் சரண்யாவின் தந்தை சங்கர், 43, இருவருடன் சென்று, நேற்று முன்தினம் பட்டப்பகலில் கிருஷ்ணகிரி டேம் ரோடு அருகே, ஜெகனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார்.
இக்கொலை தொடர்பாக ஜெகனின் தந்தை சின்னப்பையன் புகார்படி, காவேரிப்பட்டணம் போலீசார் கொலையாளிகளை தேடினர். அன்றிரவு கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில், சங்கர் சரணடைந்தார். இந்நிலையில் சங்கர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை நேற்று முன்தினம் நள்ளிரவில், ஜெகனின் உறவினர்கள் அடித்து உடைத்தனர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட ஜெகனின் உடலை வாங்க முடியாது என அவரது உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், இன்னும் ஓரிரு நாட்களில் கொலையாளிகளை பிடித்து விடுவோம் என உறுதியளித்ததால், ஜெகனின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
ஜெகனை கொன்றதில், சங்கர் தவிர மற்றவர்கள் வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்றும், திட்டமிட்டு கொலை செய்தவர்களை பழிக்குப்பழி வாங்குவோம் என, ஜெகனின் உறவினர்கள் மருத்துவமனை முன் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.