திண்டிவனம் : திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கான நீடித்த நிலையான அங்கக வேளாண்மை பயிற்சி நடந்தது.
திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம், கோயம்புத்துார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நம்மாழ்வார் அங்கக வேளாண் ஆராய்ச்சி மையம் சார்பில் 'நீடித்த நிலையான அங்கக வேளாண்மை பயிற்சி மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.
பயிற்சியை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் துவக்கி வைத்தார்.
பேராசிரியர் ராமசுப்ரமணியம், நம்மாழ்வார் ஆராய்ச்சி மைய செயல்பாடுகளையும், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
நம்மாழ்வார் அங்கக வேளாண் ஆராய்ச்சி மைய தலைவர் கிருஷ்ணன், அங்கக வேளாண்மை என்றால் என்ன. அதற்கு நாம் எவ்வாறு தயாராக வேண்டும். எந்தெந்த இடுபொருட்களை பயன்படுத்தலாம். அவைகளை நாம் எவ்வாறு தயாரிக்கலாம் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
மண்ணியல் துறை விஞ்ஞானி கோமதி, நோய்கள் தாக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியையொட்டி, அங்கக இடுபொருள்கள் குறித்த கண்காட்சி நடந்தது.
பயிற்சியில், விவசாயிகள், பண்ணை மகளிர், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.