திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுாரில், மரம் விழுந்ததால் தடைபட்ட மின்சாரத்தை உடனே வழங்காததால் ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர், உதவி மின் பொறியாளரை சரமாரியாக தாக்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் பழனி, 40, திருவெண்ணெய்நல்லுார் துணை மின் நிலையத்தில் உதவி மின் பொறியாளராக பணிபுரிகிறார்.
இரு தினங்களுக்கு முன், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மின் கம்பம் சாய்ந்து, மின் கம்பிகள் அறுந்தன.
திருவெண்ணெய்நல்லுார் - பெரியசெவலை சாலையில் சென்ற உயர்மின்னழுத்த கம்பியின் மேல் மரம் விழுந்ததால், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த மின் ஊழியர்கள் இரவு 8:30 மணி முதல், மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி, உதவி மின் பொறியாளர் பழனியிடம் பல முறை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'எப்போது மின்சாரம் வரும்' என கேட்டார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஜோதி, தி.மு.க., 3வது வார்டு கவுன்சிலர் மகன் சதாம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் சென்று பழனியிடம் தகராறு செய்து, தாக்கியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய பழனி, திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் 9:30 மணிக்கு தஞ்சம் அடைந்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ், இரு தரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்தார்.
தொடர்ந்து, நள்ளிரவு 12:00 மணிக்கு போலீஸ் நிலையத்தில் குவிந்த 50க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், 'பாதுகாப்பு இல்லாத இடத்தில் பணி செய்யமாட்டோம்' என தெரிவித்தனர்.
சமரசம் பேசிய இன்ஸ்பெக்டர், அவர்களை அனுப்பி வைத்தார்.