மதுரை:மதுரையில் இறந்த மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் கோவில் யானைகளின் நினைவாக 75 லட்சம் ரூபாய் செலவில் நினைவு மண்டபங்கள் கட்டப்பட உள்ளன.
மீனாட்சி கோவிலில் முன்பு அங்கையற்கண்ணி யானை இருந்தது. உடல்நலக்குறைவால் 2007ல் இறந்ததை தொடர்ந்து தற்போதைய யானை பார்வதி பராமரிக்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பராமரிக்கப்பட்ட அவ்வை யானை 2012ல் இறந்தது. இப்போது, தெய்வானை யானை பராமரிக்கப்படுகிறது.
இந்நிலையில், இறந்த அங்கையற்கண்ணி யானை நினைவாக கோவில் நிர்வாகம் சார்பில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் நினைவு மண்டபம் கட்டப்படவுள்ளது. இதற்காக எல்லீஸ்நகர் உட்பட கோவில் இடங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம், 30 லட்சம் ரூபாய்க்கு பசு மடம் பகுதியில் அவ்வை யானைக்கு நினைவு மண்டபம் கட்டவுள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.