தேனி:கோட்டூரில் பெய்த ஆலங்கட்டி மழை, சூறாவளியால் 10 ஆயிரம் நேந்திரன் வாழை மரங்கள் தார்களுடன் சாய்ந்தன. 36 தென்னை மரங்கள் வேரோடும், கரும்பு, மக்காச்சோளப்பயிர்கள் செடிகள் சேதமடைந்தன.
தேனி மாவட்டம், கோட்டூர் என்.ஜி.காலனி விவசாயி பெரியசாமி 53. இவர் 2 ஏக்கரில் நேந்திரன் வாழை பயிரிட்டிருந்தார்.
தார்களுடன் அறுவடைக்கு தயாராக இருந்தது. இருதினங்களுக்கு முன் ஆலங்கட்டி மழையுடன் சூறாவளி வீசியது.
இதில் 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. அதே பகுதியில் திருமூர்த்தியின் தென்னந்தோப்பில் 36 தென்னை மரங்கள் சாய்ந்தன. மேலும் தலா 1 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, மக்காச்சோளப் பயிர்களும் சேதமாயின.
தேனி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி உள்ளிட்ட அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.