விருத்தாசலம்:'இன்ஸ்டாகிராம்' வழியே காதலித்த வாலிபரை, போலீசார் முன்னிலையில் தனியார் பள்ளி ஆசிரியை திருமணம் செய்து கொண்டார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் முல்லா தோட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகன் விமல்ராஜ், 26.
விருத்தாசலம் பெரிய கண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் மகள் துளசி, 26, தனியார் பள்ளி ஆசிரியை.
விமல்ராஜ் - துளசி இடையே இரு ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு துளசி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த, 16ம் தேதி, வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்ப்பதாக, விமல்ராஜுக்கு துளசி தெரிவித்தார். அதை தொடர்ந்து, விமல்ராஜ், நேற்று முன்தினம் துளசியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார்.
அப்போது துளசியின் உறவினர்களுக்கும், விமல்ராஜுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து, டி.எஸ்.பி., ஆரோக்கியராஜிடம், விமல்ராஜ் புகார் அளித்தார்.
விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், துளசி, விமல்ராஜிடம் விசாரணை நடத்தினர். அதில், இருவரும் ஒருவரையொருவர் உண்மையாக காதலிப்பது உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் விமல்ராஜ் உறவினர்கள் முன்னிலையில், எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.