சிறுவர் விளையாட்டு திடல் சீரமைக்கப்படுமா?
உத்திரமேரூர் — காஞ்சிபுரம் சாலையில், மாதிரி அம்மன் கோவில் குளக்கரையில், பேரூராட்சி சார்பில், சிறுவர் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டது. இங்கு சிறுவர்களுக்கான சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், அமர்வதற்கு இருக்கை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
விளையாட்டுத்திடலை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் விளையாட்டுத் திடலில் விளையாடி வருகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்காவை சுற்றியுள்ள தடுப்பு கம்பி வேலி மற்றும் மின் விளக்குகள் சேதமடைந்துள்ளன.
குடிநீருக்காக வைக்கப்பட்ட மினி டேங்க் மாயமாகியுள்ளது. சறுக்கு மற்றும் ஊஞ்சல் போன்ற இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், குழந்தைகள் விளையாட முடியாத நிலை உள்ளது. எனவே, பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.
-வெ.தனசேகரன், உத்திரமேரூர்.
ஸ்ரீபெரும்புதுாரில் பன்றிகள் தொல்லை
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி பட்டுநுால் சத்திரம், வி.ஆர்.பி.,சத்திரம், ராமானுஜர் நகர், ராஜிவ் நகர், கச்சிப்பட்டு, காமராஜர் நகர், விக்னேஷ் நகர், சரளா நகர், ஜெமினி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றன.
இவை உணவுக்காக வீடுகளின் பின்புறம் உள்ள தோட்டத்தை கபளிகரம் செய்கிறது. பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நோய் பரவும் ஆபத்து உள்ளது. ஸ்ரீபெரும்புதுாரில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- சி.கந்தசாமி, ஸ்ரீபெரும்புதுார்.
ஒரத்துாரில் தரைப்பாலம் சீரமைக்க வேண்டும்
குன்றத்துார் ஒன்றியத்தில் ஒரத்துார் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட நீலமங்கலம் செல்லும் சாலையில் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மேல் உள்ள சாலை சேதமடைந்து மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதால் பாலம் மேலும் சேதமாகும் நிலை உள்ளது. இந்த பாலத்தின் சாலையை சீரமைக்க வேண்டும்.-
-சி.கோபால், ஒரத்துார்.
சாலையோர குப்பைஅகற்ற வேண்டும்
காஞ்சிபுரம் மாநகராட்சி முருகப்பா சாலையில் கொட்டப்பட்ட குப்பையை எடுக்காமல் விட்டதால் சாலையில் சிதறி கிடக்கிறது. அதே போல அதியமான் நகர் செல்லும் சந்திப்பிலும் குப்பை எடுக்காமல் கிடக்கிறது. வெட்ட வெளியில் குப்பையை கொட்டுவதால் அந்த இடம் பார்ப்பதற்கு அசுத்தமாக இருக்கிறது. குப்பையை தினசரி எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே. சுப்பிரமணி, காஞ்சிபுரம்.
குன்றத்துார் - போரூர் நெடுஞ்சாலையில், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை பகுதியில் சாலையோரம் அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளன. இந்த குப்பையில் உணவு தேடி, நாய், மாடுகள் நுழைவதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டும். குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-
-ஆர்.சக்திவேல், குன்றத்துார்.