உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவாம்பயிர் மற்றும் சிறுகளத்துார் கிராம விவசாயிகள் ஏரி பாசனத்தின் மூலம் பல ஏக்கர் நிலப் பரப்பில் நெல், வேர்க்கடலை உள்ளிட்டவை பயிரிடுகின்றனர். இப்பகுதி விவசாயிகள், தங்களது நிலங்களுக்கு சென்று வர, ஏதுவாக மண் பாதை அமைத்துள்ளனர்.
டிராக்டர், மாட்டு வண்டி மற்றும் டிரில்லர் போன்ற வாகனங்களை விவசாயம் சார்ந்த பணிகளுக்காக இந்த மண் பாதை வழியாக இயக்குகின்றனர். சிறுகளத்துார் ஏரியில் இருந்து, அப்பகுதி விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாசனக் கால்வாய் இணைப்பாக சிமென்ட் 'பைப்' வைத்து பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த பருவ மழைக்காலத்தின் போது சிமென்ட் பைப்பின் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டது. இதனால், இந்த மண் பாதை வழியாக மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க முடியாமல் விவசாயிகள் சிரமபடுகின்றனர்.
எனவே, இப்பாதையில், பாசனக்கால்வாய் இணைப்பாக சிறுபாலம் ஏற்படுத்த காவாம்பயிர் மற்றும் சிறுகளத்துார் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.