தாம்பரம்,:ஆசியாவின் பெரிய உயிரியல் பூங்காவான, வண்டலுார் உயிரியல் பூங்கா, 1,500 ஏக்கர் பரப்பளவு உடையது. 2,400 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர்.
இப்பூங்காவில், ஒன்பது சிங்கங்கள் உள்ளன. அதில் ஐந்து, சிங்க உலாவிட பகுதியில் பராமரிக்கப்படுகின்றன. மூன்று, பார்வைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு சிங்கம், புனர்வாழ்வு மையத்தில் பராமரிக்கப்படுகிறது.
போதிய சிங்கங்கள் இல்லாததால், பூங்காவில் 'லயன் சபாரி' மூடியே வைக்கப்பட்டுள்ளது.
இதனால், விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், மற்ற பூங்காக்களில் இருந்து சிங்கங்களை கொண்டுவர நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
குஜராத் மாநிலம், சக்கபர்க் உயிரியல் பூங்காவில் இருந்து, ஒரு ஜோடி சிங்கங்களை வண்டலுார் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது.
விலங்குகளை பரிமாறிக்கொள்ள வேண்டுமென்றால், பரிமாறப்படும் விலங்குகளின் தகவல்களை, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு, சம்பந்தப்பட்ட இரு பூங்காக்களும் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த தகவல் சரியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே, ஆணையம் அனுமதி வழங்கும்.
வண்டலுார் பூங்கா நிர்வாகம், முறையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், சக்கபர்க் பூங்கா நிர்வாகம், சரியான தகவலை சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால், ஆணைய அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, ஒரு ஜோடி சிங்கங்களை கொண்டுவரும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், வெறுப்படைந்த வண்டலுார் பூங்கா நிர்வாகம், வேறு பூங்காவில் இருந்து விலங்குகளை கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீர் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி இமாலய கருங்கரடிகள், வண்டலுார் கொண்டு வரப்பட உள்ளன. இங்கிருந்து ஒரு ஜோடி புலிகள் அனுப்பப்பட உள்ளன.மைசூரு பூங்காவில் இருந்து ஒரு ஜோடி சிறு கரடிகள் கொண்டுவரப்பட உள்ளன. இதற்கு மாற்றாக, இரண்டு ஜோடி நெருப்புக் கோழிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான வேலைகளில், வண்டலுார் பூங்கா ஈடுபட்டுள்ளது.