ஊட்டி: 'ஊட்டி நகரை துாய்மையாக வைக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்,' என, நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் கமிஷனர் காந்திராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கோடை விழா மற்றும் சீசனுக்காக நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக நகரை துாய்மையாக வைக்க, பராமரிப்பு இல்லாத கழிவறைகளை சீரமைக்க 'டெண்டர்' விடப்பட்டு, இப்பணியை, ஏப்., 15க்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர 'பார்க்கிங்' பகுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க, 'நோட்டீஸ்' வினியோகித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓட்டல், காட்டேஜ்களில் திருமண நிகழ்வு போன்ற வர்த்தக ரீதியாக செயல்பாடுகள் நடக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி சுகாதார பணியாளர்கள், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குப்பைகளை வாங்கி வருகின்றனர். குப்பைகளை தரம்பிரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்த வசதியாக சுகாதார பணியாளர்களிடம் கொடுத்து நகரின் துாய்மையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
காட்டேஜ் மற்றும் ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' குப்பைகள் இருப்பின், அபராதம் விதிப்பதுடன் குறிப்பிட்ட கட்டடத்திற்கு 'சீல்' வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.