திருப்பூர்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, மாணவர்கள், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவக்குவது கட்டாயமாகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், ஒன்பது முதல் பிளஸ்2 வகுப்பு படிக்கும் 9,032 ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர் உள்ளனர். இவர்களில், பள்ளிகளில் நடத்தப்பட்ட முகாம்கள் மூலம், மூவாயிரம் மாணவர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது; மீதம் 6,302 மாணவர்கள், வரும் 25 ம் தேதிக்குள் (நாளை) ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவக்கவேண்டியுள்ளது.
பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமின்றி அருகிலுள்ள தபால் அலுவலகங்கள், போஸ்ட்மேன், கிராம தபால் ஊழியரை அணுகி, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு துவக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
போஸ்ட்மேன் மற்றும் கிராம தபால் ஊழியர்கள், ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் கருவி மூலம், மாணவர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி விரைவில் இ-கே.ஒய்.சி., மூலம் சில நிமிடங்களில் கணக்கு துவக்க முடியும்.