திருப்பூர்: சர்வதேச அளவிலான 'இந்தியா நிட்பேர்' பின்னலாடை கண்காட்சி இன்று நிறைவடைகிறது.
இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுத்தரும்வகையில், ஐ.கே.எப்., எனப்படும் இந்தியா இன்டர் நேஷனல் நிட்பேர் கண்காட்சி, ஆண்டுதோறும் திருப்பூரில் நடத்தப்பட்டுவருகிறது.
49வது ஐ.கே.எப்., கண்காட்சி, திருமுருகன்பூண்டி அருகேயுள்ள இந்தியா நிட்பேர் வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மட்டுமின்றி நாட்டின் பல்வேறுபகுதி பின்னலாடை நிறுவனங்கள், 70 ஸ்டால்களில், குழந்தைகள், சிறுவர், ஆண்கள், பெண்களுக்கான உள்ளாடை ரகங்கள், செயற்கை இழையில் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட ஆடை ரகங்கள் இடம்பெறச் செய்துள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாட்டு வர்த்தகர்களும், வர்த்தக முகமை நிறுவனத்தினரும் கண்காட்சியை பார்வையிட்டு, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வழங்க வர்த்தக விசாரணை நடத்துகின்றனர். இரண்டாவது நாளான நேற்று, கண்காட்சியை பார்வையிட வர்த்தகர்கள் மிகுந்த ஆர்வம்காட்டினர்.
மாலையில் நடந்த பேஷன் ஷோவில், இளைஞர்கள், இளம்பெண்கள், புதுமையான ஆடை ரகங்களை அணிந்துவந்து, அறிமுகப்படுத்தினர். சர்வதேச அளவிலான இக்கண்காட்சி, இன்று மாலை, 6:00 மணியுடன் நிறைவடைகிறது.