அவிநாசி: அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீ அரசமரத்து விநாயகர் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
இதற்காக, நேற்று முன்தினம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன்பின், அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இரவு படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் நடைபெற்றது. நேற்று காலை, பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இன்று மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா வருதல், மறுபூஜையூடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. விழாவை முன்னிட்டு, நேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.