திருப்பூர்: திருப்பூர் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில், வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்ட நிலையில், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன; சாலை விரிவாக்கம் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் நகரின் புறநகர் பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமானோர் பல்வேறு பணியின்மித்தம், திருப்பூர் வந்து செல்கின்றனர். நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அவிநாசி - திருப்பூர் சாலையில், வாகன நெரிசல் என்பது, அன்றாட நிகழ்வாகி விட்டது.
அடிக்கடி விபத்து நேரிடுகிறது. அளவுக்கதிகமான வாகனங்கள், அதிவேகம், கவனச்சிதறல் என, பல்வேறு காரணங்களால் விபத்து நேரிடுகிறது என, போலீசார் தெரிவிக்கின்றனர். எனவே, சாலை விரிவாக்கம் மற்றும் தடையில்லா வாகன போக்குவரத்து சார்ந்து திட்டமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:
திருப்பூர் - அவிநாசி ரோடு, நான்கு வழிப்பாதையாக தான் உள்ளது. ஆனால், சாலையோர கடைகளின் எண்ணிக்கை, ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டதால், பல இடங்களில் சாலை சுருங்கியுள்ளது. 'பிழைக்க வழியில்லை' எனக்கூறி சாலையோர கடைகளை பலரும் அமைத்துக் கொள்கின்றனர். 'இதுதான், தங்களின் வாழ்வதாரம்' என தங்களை நிலைப்படுத்தியும் கொள்கின்றனர்.
அந்த வகையில் ஏராளமான சாலையோர கடைகள் உருவாகிவிட்டன. அடிக்கடி விபத்து நடக்கும் இடங்கள், குறுகலான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, அந்த இடத்தை உரிமை கொண்டாடுகின்றனர்; இதனால், நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பல இடங்களில், நான்கு வழிப்பாதை கூட, இரு வழிப்பாதையாக 'சுருங்கி' விட்டது.
தற்போது, நகர்புறம் மட்டுமின்றி, கிராமப்புறங்களில் கூட வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில், இரு வழிப்பாதைகளை கூட நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
திருப்பூர் - அவிநாசி சாலையில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தினாலே சாலையில் விபத்து, நெரிசல் தவிர்க்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நெடுஞ்சாலைத்துறையினர் மட்டுமின்றி, போலீசார், உள்ளாட்சி நிர்வாகத்தினர், மின்வாரியத்தினர் என சம்மந்தப்பட்ட துறையினர் அனைவரும் இணைந்து, சாலையில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கவும் தடையில்லா, விபத்தில்லா போக்குவரத்துக்கு வழிவகை ஏற்படுத்தவும் திட்டமிடவேண்டும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்திலும், இதுகுறித்து விவாதித்து, ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏராளமான சாலையோர கடைகள் உருவாகிவிட்டன. அடிக்கடி விபத்து நடக்கும் இடங்கள், குறுகலான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, அந்த இடத்தை உரிமைக் கொண்டாடுகின்றனர்