திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதி ரேஷன்கடைகளில் நேற்று முதல் குறைந்த எடை காஸ் சிலிண்டர் விற்பனை துவங்கியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் மூலம், தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளில் 2, 5 கிலோ குறைந்த எடை கொண்ட காஸ் சிலிண்டர் விற்பனை நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவிலில் இந்த திட்டம் துவங்கப்பட்டு, ஊரக பகுதிகளில் உள்ள 13 ரேஷன் கடைகளில், காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று முதல், திருப்பூர், அரண்மனைப்புதுாரில் உள்ள ரேஷன் கடைக்கு, குறைந்த எடை கொண்ட காஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வந்திறங்கின. படிப்படியாக மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும், காஸ் சிலிண்டர் விற்பனை துவங்க உள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள், குறு, சிறு வியாபாரிகள், சுற்றுலா செல்வோர் உட்பட பொதுமக்கள் யார்வேண்டுமானாலும் ரேஷன்கடைகளில் காஸ் சிலிண்டர் பெறலாம். முதல் முறை டெபாசிட் செலுத்தி சிலிண்டர் வாங்க வேண்டும்.
குறிப்பிட்ட ரேஷன் கடை என்றில்லாமல், அடையாள அட்டையை காண்பித்து, எந்த ஒரு கடையிலும் காலி சிலிண்டர் கொடுத்து, காஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் பெற்றுக்கொள்ளலாம். திருப்பூர் மாநகர பகுதிகளில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் ஏராளம் உள்ளன.
வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து புலம் பெயர்ந்துவந்து, குடும்பத்தினருடன் வாடகை வீடுகளிலும்; தனியாக மேன்ஷன்களிலும் தங்கி பணிபுரிகின்றனர். இவர்களின் எரிபொருள் தேவையை, ரேஷனில் வழங்கப்படும் குறைந்த எடை சிலிண்டர் பூர்த்தி செய்யும்.