திருப்பூர்: மார்ச் மாதமும் முடியும் தருவாய் எட்டியுள்ள நிலையில், திருப்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய, மாநில அரசு களின் நிதி மொத்தம், 125.07 கோடி ரூபாய் மதிப்பில், தாராபுரம் ரோட்டில், 635 படுக்கைகளுடன், ஆறு தளங்களில் புதிய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டும் பணி கடந்த, 2020ம் ஆண்டின் இறுதியில் துவங்கியது.
கொரோனா காலத்தில் பணி தடைபட்டது. இருப்பினும், நான்கு தளங்களுக்கான பணிகள், 2022 நவ., மாதம் நிறைவு பெற்றது. தற்போது, தரைத்தளம் உள்ளிட்ட ஐந்து தளங்களில் சிலாப், கற்கள், டைல்ஸ், கிரானைட் பதிக்கும் பணி நிறைவு பெற்று, வர்ணம் அடித்து முடிந்தும், திறப்பு விழா எப்போது என்று அறிவிப்பு வெளியாகமல் இருக்கிறது.
இந்த மாதம் திறப்பு விழாவுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், மார்ச் மாதம் முடியும் நிலையில், தற்போதைக்கு திறப்பு விழா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
வெளிப்புற காம்பவுண்ட் சுவர், மழைநீர், தண்ணீர் வெளியேறுவதற்கான சாக்கடைக் கால்வாய், நுழைவு வாயில் மற்றும் சுற்றுவட்டச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இன்னும் ஒரு மாதமாகும்
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சுற்றுச்சுவர் கட்ட புதிய அஸ்திவாரம் எடுத்தால், பாறைகள் நிறைந்து காணப்படுகிறது.
அருகிலேயே மருத்துவமனை செயல்படுவதால், வெடி வைக்க முடியாது. உடைத்து தான் அகற்ற வேண்டும்.
தரைத்தளம் உள்ளிட்ட, ஆறு தளங்களில், 95 சதவீத பணிகளும் முடிந்துள்ளது. இனி, மருத்துவமனைக்குள் வேலை இல்லை. வெளியே தான் தற்போது பணி நடந்து வருகிறது.
இப்பணிகளும், ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட்டு விடும். ஏப்., முதல் வாரத்தில், முடிக்கப்பட்டு கல்லுாரி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்படும்,' என்றனர்.
இந்நிலையில், 'பணிகளை விரைந்து முடித்து, திறப்பு விழாவுக்கு தயார் படுத்த வேண்டும்,' என, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாக தரப்பில் இருந்து, பொதுப்பணித்துறை உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.