சென்னை, சென்னையில் முக்கிய வணிக வளாகமாக, வேளச்சேரி, 'பீனிக்ஸ் மால்' உள்ளது; 10 லட்சம் சதுர அடி பரப்பு உடையது.
இங்கு, 263 கடைகள், 11 திரையரங்குகள் உள்ளன. வளாகத்தில், 2,525 கார்கள், 3,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் உள்ளன.
இந்த வளாகத்தில், அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது. மால் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தேவையான தண்ணீரை, ஆழ்துளை கிணறு மற்றும் லாரியில் வாங்கப்படுகிறது.
கழிவு நீரை சுத்திகரிப்புசெய்து கிடைக்கும் நீரை, கழிப்பறை உபயோகம் மற்றும் பார்க் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
சுத்திகரிப்புக்கு பின் வரும் கழிவுகள், லாரியில் ஏற்றி, பெருங்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கொட்டப்படுகிறது.
ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்ததால், வேளச்சேரியை சுற்றி உள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் குறைந்தது.
இந்நிலையில், பீனிக்ஸ் மால் நிர்வாகம், குடிநீர், கழிவு நீர் இணைப்பு கேட்டு, குடிநீர் வாரியத்திற்கு, 3.50 கோடி ரூபாய் செலுத்தி உள்ளது.
வேளச்சேரி நுாறடி சாலையில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து, குடிநீர் வழங்க, 1.5 கி.மீ., குழாய் பதிக்கப்பட உள்ளது.
மேலும், சுத்திகரித்து வெளியேற்றும் கழிவு நீரை, 200 அடி துாரத்தில் உள்ள கழிவு நீரகற்று நிலையம் எடுத்துச் செல்லும் வகையில் குழாய் பதிக்கப்பட உள்ளது.
குடிநீர், கழிவு நீர் இணைப்பு வழங்க ஆய்வு பணி நடக்கிறது. ஓரிரு மாதத்தில், இணைப்பு வழங்கப்படும் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.
இதனால், வேளச்சேரியில் நிலத்தடி நீர் பாதிப்பு குறைவதால், பகுதிமக்கள் நிம்மதி அடைந்தனர்.