கோவை: அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல அலுவலகத்தில், நுகர்வோர் அமைப்புகளுடனான கூட்டம், பொது மேலாளர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில், நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் வைத்த கோரிக்கைகள் வருமாறு:
கோவை நகர் உருவான போதிலிருந்து இயங்கி வந்த, காந்திபார்க் முதல் காந்திபார்க் வரை இயங்கும் வழித்தட எண்.7, சிவானந்தா காலனி - சிவானந்தா காலனி வழித்தட எண் 5, மதுக்கரையிலிருந்து கணபதி வரை இயக்கும் வழித்தட எண் 3, பேரூரிலிருந்து அரசு பாலிடெக்னிக் வரை இயங்கும் வழித்தட எண் 2 ஆகிய டவுன் பஸ்கள், எவ்வித முன்னறிவிப்புமின்றி, பாதியாக குறைக்கப்பட்டது. பயணிகள் சிரமப்படுகின்றனர்.
மருதமலையில் இருந்து ஆவாரம்பாளையம் வரை இயக்கப்பட்ட வழித்தட எண். 1 பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
இவ்வாறு, கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து, பொது மேலாளர் ஸ்ரீதரன் பேசுகையில், ''கோவையில் 600 நகர பஸ்களும் 350, புறநகர் பஸ்களும் இயக்கப்படுகின்றன. 2015ம் ஆண்டு முதல் கண்டக்டர் மற்றும் டிரைவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யாததால், ஏற்கனவே நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க முடியவில்லை.ஒவ்வொரு மாதமும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஓய்வு பெறுவதால், பல பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோவைக்கு டிரைவர் மற்றும் கண்டக்டர் பணிக்கு, ஆட்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவர். அதன் பின் படிப்படியாக நிறுத்தப்பட்ட பஸ்கள் இயக்கப்படும்,'' என்றார்.
அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.