கோவை: மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒப்பந்த நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர் என, உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.கோவை மாநகராட்சியில், 3,600 தற்காலிக துாய்மை பணியாளர்களும், 2,356 நிரந்தர பணியாளர்களும் உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உயர்த்தி அறிவித்த, 721 ரூபாயை மாநகராட்சி வழங்காததால் கடந்தாண்டு இறுதியில் போராட்டத்தில் குதித்தனர்.தினக்கூலியாக இந்தாண்டு ஜன., 1 முதல், 648 ரூபாய் வழங்கப்படும் என, மாநகராட்சி அறிவித்த நிலையில், 421 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். தவிர, குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு 'டெண்டர்' விடப்படும் என்ற அறிவிப்பு, தற்காலிக தொழிலாளர்கள் மத்தியில் பணி நீக்க அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பாரதீய மஸ்துார் சங்கம்(பி.எம்.எஸ்.,), தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொது பணியாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கத்தினர், மாநகராட்சி பிரதான அலுவலகம் முன் நேற்று ரோட்டில் அமர்ந்து, காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்.
பிரச்னை குறித்து தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில், மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார், தொழிற்சங்கத்தினர் பேச்சு நடத்தினர்.
அண்ணல் அம்பேத்கர் சங்க பொது செயலாளர் செல்வம் கூறுகையில்,''பேச்சுவார்த்தையில் புதிதாக ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனத்தில், தற்போது மாநகராட்சியில் தற்காலிகமாக பணிபுரியும் தொழிலாளர்கள் முன்னுரிமை கொடுத்து பணியமர்த்தப்படுவர் என, உறுதியளிக்கப்பட்டது. இதனால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.