துாத்துக்குடி, :உடன்குடி பேரூராட்சியில் பணி உயர்வுக்கு லஞ்சம் கேட்டதால் விஷம் குடித்த துாய்மை பணியாளர் இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில் சுடலைமாடன் 55, என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு தூய்மை பணி மேற்பார்வையாளர் பணி உயர்வு வழங்க தற்போது பேரூராட்சியின் தலைவியாக இருக்கும் ஹுமைராவின் (தி.மு.க.) மாமியாரும் முன்னாள் தலைவியுமான ஆயிஷா(அ.தி.மு.க.) லஞ்சம் கேட்டார்.
சுடலைமாடன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை ஆயிஷா அவதூறாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த சுடலைமாடன் மார்ச் 17ல் விஷம் குடித்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று காலை இறந்தார். குலசேகரப்பட்டினம் போலீசார் ஆயிஷா, செயல் அலுவலர் பாபு மீது வன்கொடுமை பிரிவில்வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.
போராட்டம்
பேரூராட்சி முன்னாள் தலைவி மற்றும் அலுவலரை கைது செய்ய வேண்டும். தற்போதைய பேரூராட்சி தலைவி ஹுமைரா மீதும் வழக்கு பதிவு செய்து பதவி நீக்கம் வேண்டும். குடும்பத்தினருக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அவரது மகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மைப்பணியாளர்கள் மற்றும் சுடலை மாடன் உறவினர்கள் உடன்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றுக் கொள்ள மறுத்தனர்.
இந்நிலையில் எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுடலை மாடன் மகளுக்கு, சாத்தான்குளம் பேரூராட்சியில் அரசு பணி வழங்க முடிவு செய்யப்பட்டது. இழப்பீடாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டதால் இன்று உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர்.