திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அம்மணி அம்மன் மடம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில், தலைமறைவாக இருந்த பா.ஜ., நிர்வாகியை, திருப்பதியில் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் அம்மணி அம்மன் கோபுரம் எதிரிலுள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தை, பா.ஜ., ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர், 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வீடு மற்றும் கட்டடம் கட்டியிருந்தார்.
அவரின் ஆக்கிரமிப்பு கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அப்போது இந்த கட்டடத்திற்கு அருகில், இடிந்து விழும் நிலையில் இருந்த, அம்மணி அம்மன் மடமும் இடிக்கும் பணி நடந்தது.
ஹிந்து முன்னணி எதிர்ப்பால், பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இடிக்கப்பட்ட அம்மணி அம்மன் மட இடிபாடுகளின் மீது கடந்த, 19ல், சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தேனிமலை ஏழுமலை, 49, காளியப்பன், 50, கார்த்திகேயன், 23, ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த சங்கரை, ஆந்திரா மாநிலம், திருப்பதியில் நேற்று போலீசார் கைது செய்தனர்.