கிருஷ்ணகிரி,:''கணவரை கொன்றவர்களை துாக்கில் போட வேண்டும்,'' என, கிருஷ்ணகிரி அருகே கொலை செய்யப்பட்ட வாலிபரின் மனைவி சரண்யா கூறினார்.
கிருஷ்ணகிரி அருகே, காதல் திருமணம் செய்த வாலிபர் ஜெகன் கடந்த, 21ல், அவரது மாமனார் சங்கர் மற்றும் சிலரால் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சட்டசபை விவாதம் வரை சென்ற நிலையில், நேற்று அவரின் மனைவி சரண்யா நிருபர்களிடம் கூறியதாவது:
எனக்கு திருமணமாகி, இரண்டு மாதம் கூட ஆகவில்லை; அதற்குள் இப்படி ஆகி விட்டது. நான் திருமணமான நாள் முதல், என் வீட்டு ஞாபகம் வந்தால், தனிமையில் அழுவேன். அப்போது, என்னை சமாதானப்படுத்தி என்னுடன் சேர்ந்து என் கணவரும் அழுவார். என்னை, ராணி மாதிரி பார்த்துக் கொண்டார். அப்படிப்பட்டவரை கொன்று விட்டார்களே; இதற்கு என்னை கொன்றிருக்கலாமே.
ஜெகனை மறக்கக்சொல்லி என் தாய் எட்டி உதைத்த போதும், சித்ரவதை செய்த போதும், பொறுத்து கொண்டு திருமணம் செய்தேன். என் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள். இதில், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் துாக்கில் போட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.