பெ.நா.பாளையம்:ஏத்தாப்பூரில் மளிகை கடை நடத்தும் மூதாட்டியை, பட்டப்பகலில் தாக்கி, அவரது காதை அறுத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண் உட்பட, இருவரை போலீசார் தேடுகின்றனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூர் சர்வீஸ் சாலையை சேர்ந்த உதயகுமார் மனைவி விஜயா, 67. அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.
நேற்று காலை, 11:40 மணிக்கு, இளைஞர் மற்றும் இளம்பெண் கடைக்கு வந்தனர். முத்துமலை முருகன் கோவிலுக்கு வந்ததாக கூறிய அவர்கள், தண்ணீர் கேட்டனர்.
இதனால் கடை அருகே உள்ள வீட்டுக்கு சென்ற மூதாட்டியை, அந்த இருவரும் பின் தொடர்ந்து சென்றனர்.
தொடர்ந்து அவரை தாக்கி அவர் அணிந்திருந்த, 3 சவரன் தங்க சங்கிலியை பறித்தனர். அவரது காதை அறுத்து, 1 சவரன் தோட்டையும் பறித்து தப்பினர்.
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த 1ம் தேதி, ஆத்துார் அருகே 73 வயது மூதாட்டியின் காதை அறுத்து, அவர் அணிந்திருந்த 22 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. குற்றவாளிகள் இதுவரை பிடிபடவில்லை.