ஈரோடு:பேப்பர் கட்டு லஞ்சமாக கேட்டதாக, மாநகராட்சி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது, தனித் தேர்வர் மற்றும் முன்னாள் மாணவர் புகார் தெரிவித்தனர்.
ஈரோடு, கொல்லம்பாளையம் மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத்தேர்வு நடந்து வருகிறது.
இதற்கு விண்ணப்பித்த, தனித்தேர்வரான அந்தியூரைச் சேர்ந்த மணிகண்டன், 25, அதற்கான 'ஹால் டிக்கெட்' பெற, பள்ளிக்கு நேற்று வந்தார்.
அவரிடம் நான்கு கட்டு வெள்ளை பேப்பர் வாங்கி வந்தால் தான் ஹால் டிக்கெட் தருவதாக, தலைமையாசிரியை தேன்மொழி கூறியதாக கூறப்படுகிறது.
இதனால், 1,050 ரூபாய் மதிப்பில் நான்கு கட்டு பேப்பரை வாங்கி வந்தவர், பள்ளியில் தராமல், நிருபர்களை அழைத்து, பள்ளி வளாகத்தில் புகார் கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நான் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறேன். பள்ளியில் நடந்த ஐந்து நாள் செய்முறை பயிற்சி வகுப்பில் இரண்டு நாள் வரவில்லை. இதனால் வருகைப்பதிவு சதவீதம் குறைவாக உள்ளது.
நான்கு கட்டு 'பேப்பர்' வாங்கித் தந்தால் தான் அனுமதிக்க முடியும் என்று, பள்ளி தலைமை ஆசிரியை கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பள்ளி முன்னாள் மாணவர் சிவக்குமார், நன்னடத்தை சான்றிதழ் கேட்டு, பள்ளிக்கு நேற்று காலை வந்தார். அவரிடமும் இரண்டு கட்டு பேப்பர் வாங்கி வரும்படி தலைமை ஆசிரியை கேட்டுள்ளார்.
அவரும் வாங்கித் தந்த நிலையில், ஊழியர்கள் வாங்கி வைத்துக் கொண்டு, மதியம் வந்தால் சான்றிதழ் தருவதாக கூறவே, அதிருப்தியுடன் அவர் சென்றார்.
இதுகுறித்து தலைமையாசிரியை தேன்மொழி, 53, கூறியதாவது:
தனித்தேர்வர் மணிகண்டனிடம் நாங்கள் பேப்பர் வாங்கி வரச் சொல்லவில்லை. அவர் எங்களை சிக்க வைக்க இப்படி கூறுகிறார். நன்னடத்தை சான்றிதழ் கேட்டு வந்த சிவக்குமார், முன்னாள் மாணவர். அவராக விருப்பப்பட்டே பேப்பர் வாங்கி வந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.