திருநெல்வேலி:ராதாபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து 11 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில் பிளஸ் 1 மாணவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே பக்திநாதபுரத்தை சேர்ந்த அருள்மிக்கேல் மனைவி உஷாதேவி 62. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மூவரும் திருமணமாகி ஆஸ்திரேலியா, சென்னை உள்ளிட்ட இடங்களில் வசிக்கின்றனர்.
மார்ச் 20 ல் உஷாதேவி வீட்டில் தனியாக இருந்தார். அவர் வெளியே வராததால் உறவினர் பெண் சென்று பார்த்த போது வீட்டினுள் உஷாதேவி குப்புற விழுந்து கிடந்தார்.
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை தெரிவித்தார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு விழுந்து இறந்து இருக்கலாம் என குடும்பத்தினருக்கு தகவல் கூறினர். உடலை அடக்கம் செய்வதற்கு முன்னதாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்தனர். காயங்கள் இருப்பதை பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர்.
வள்ளியூர் டி.எஸ்.பி.யோகேஷ்குமார் வீட்டு முன் இருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருப்பதை பார்த்தார். அதில் பதிவான காட்சிகளை பார்த்த போது சம்பவ நேரத்தில் மாணவர், வீட்டுக்குள் வந்து செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் பள்ளவிளையைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 1 மாணவர் என உறுதியானது. அவரை பிடித்து விசாரித்த போது அவர் உஷா தேவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கொலை நடந்தது எப்படி
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'வடக்கன்குளம் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர் உஷாதேவி வீட்டிற்கு அடிக்கடி தென்னை மர பராமரிப்பிற்கு வந்து சென்றுள்ளார்.
சம்பவத்தன்றும் அவரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் அதிக பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் வீட்டுக்குள் சென்று உஷாதேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின், கை வளையல் என 11 பவுன் நகைகளை பறித்து சென்றுள்ளார்.
நகை கொள்ளையடித்தது குறித்து தனது அண்ணன் ஜான்சன் உள்ளிட்டோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உதவியுடன் நகைகளை வள்ளியூர், ராதாபுரம் கடைகளில் அடகு வைத்து விலை உயர்ந்த டூவீலர் வாங்கியுள்ளார்.
மூதாட்டி கொலை, நகை கொள்ளை தொடர்பாக மாணவர், ஜான்சன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மாணவர், நண்பர் உதய பிரகாஷ் 34, அவரது மனைவி சகாயசுபா 31, நண்பர் ரஞ்சித் 20, வீட்டில் வேலை செய்யும் ஜெயா 41, மற்றொரு நண்பர் ஜோர்டான் 20, ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜான்சனை தேடிவருகிறோம், என்றனர்.