திண்டுக்கல்-''ஆடு வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகளுக்கு மானியமாக ரூ.2 கோடியே 45 லட்சம் வழங்கி உள்ளோம்,'' என, திண்டுக்கல் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் ஆர்.திருவள்ளுவன் தெரிவித்தார்.
கால்நடைகளுக்கு அதிகம் நோய் பரவுகிறதே.
கால்நடைகளுக்கு கோமாரி எனும் நோய் பரவிவருகிறது. அதை தடுக்க மார்ச் 1 லிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடுகிறோம். 2,91,700 கால்நடைகளுக்கு இலக்கு நிர்ணயித்து 90 சதவீத கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தி உள்ளோம்.
விவசாயிகள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டுகிறார்களா.
தடுப்பூசி 6 மாதத்திற்கு ஒரு முறை போடுகிறோம். எங்களை விட விவசாயிகள் தான் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆர்வமாக உள்ளார்கள். முறையாக தவணை தவறாமல் விவசாயிகள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை கடைபிடித்தால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது.
கோமாரி நோய் தாக்கினால் பாதிப்புகள்.
கோமாரி நோய் என்பது வைரஸ் மூலம் பரவக்கூடியது. எளிதில் மற்ற மாடுகளுக்கு பரவிவருகிறது. இது மாடுகளை தாக்கினால் வாய்,கால்,குழம்பு உள்ளிட்ட பகுதிகளில் புண்கள் ஏற்படும். கால்நடைகள் சோர்வாகும். முறையாக கவனிக்காமல் இருந்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
கால்நடை மானியங்கள் முறையாக செல்கிறதா.
திண்டுக்கல்லில் உள்ள 14 ஒன்றியங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட விரும்பி விண்ணப்பித்த 70 பேருக்கு 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி வளர்க்க ஏற்பாடுகள் செய்து கொடுத்திருக்கிறோம்.
மானியமாக ரூ. 52 லட்சத்து 50 ஆயிரம் வழங்கி உள்ளோம். ஆடுகள் வளர்ப்பில் ஈடுபட விண்ணப்பித்த 1400 பேருக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.2 கோடியே 45 லட்சம் மானியம் வழங்கி உள்ளோம்.
மாடுகளுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்படுகிறதே.
சில நேரங்களில் தோல் நோய் மாடுகளுக்கு ஏற்படுகிறது. இதனால் தோல் முழுவதும் உரிந்து புதிதாக வரும். அதுக்கும் தடுப்பூசி போடுகிறோம்.
வெயில் காலங்களில் கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது.
தற்போது கோடை காலம் நெருங்கிவிட்டதால் கால்நடைகளை வெயில் நேரங்களில் மேய்ச்சலுக்கு ,காலை,மாலை நேரங்களில் அழைத்து செல்லலாம். வெயில் தாக்கத்தை குறைத்தால் கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
பால் உற்பத்தியை அதிகரிக்க வழி.
முடிந்த அளவிற்கு பச்சை புற்களை உணவாக கொடுக்கலாம். கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தாது உப்புக்கலவை உணவாக கொடுக்கிறோம். அதை பயன்படுத்தலாம். கருத்தாக கால்நடைகளை பார்த்து கொள்வதால் பால் உற்பத்தியை அதிகரிக்கலாம், என்றார்.