பழநி--பழநி நகராட்சி கூட்டத்தில் தினமலர் வார்டு ரவுண்ட் அப் பகுதியில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி கவுன்சிலர் விவாதித்தார்.
இக்கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் கந்தசாமி, கமிஷனர் கமலா, பொறியாளர் வெற்றிச்செல்வி, நகர்நல அலுவலர் மனோஜ் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் விவாதம்:
சாகுல்ஹமிது (தி.மு.க.,): 2011 விருந்து தற்போது வரை ஜிகாபைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
தலைவர்: விடுபட்ட பகுதிகளில் ஜிகாவை பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும்.
சாகுல்ஹமிது (தி.மு.க.,): வார்டு சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிலை என்ன?
தலைவர்: கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகளில் சிறிய வேலைகள் முடிந்துள்ளன. அதிக செலவில் உள்ள பெரிய வேலைகள் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.
சாகுல்ஹமிது (தி.மு.க.,): தண்ணீர் தொட்டிகள் இரவில் மது குடிக்கும் இடமாக மாறி வருகிறது.
தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்
ரகுமான் (தி.மு.க.,): பஸ் ஸ்டாண்ட் பார்க் பகுதி கடைகளால் சுகாதாரக் கேடு உள்ளது.
நகர்நல அலுவலர்: பூங்காவை சுற்றிலும் மஞ்சப்பை விற்கும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இரவு நேரத்தில் அப்பகுதியில் அசுத்தம் செய்து வருகின்றனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
செபாஸ்டியன் (தி.மு.க.,): 'தினமலர்' நாளிதழில் எனது வார்டு குறித்த செய்தியில் தெருநாய் தொல்லை குறித்து வெளியிட்டுள்ளனர். நாய்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகர் நல அலுவலர்: தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய குளிரூட்டப்பட்ட அறுவை சிகிச்சை அறை உள்ளது.
தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்ய எவரும் முன் வருவதில்லை. ஒரு நாய்க்கு அறுவை செய்ய ரூ.700 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி குறைவால் தயக்கம் காட்டி வருகின்றனர். நகராட்சி பகுதி நாய்களுக்கு அறுவை சிகிச்சை, வெறிநாய் தடுப்பூசி செலுத்த டாக்டர்களை அணுகி வருகிறோம்.
தலைவர்: இது போன்ற நாய்தொல்லை எனது வார்டிலும் உள்ளது. தனிநபர்கள் தலையீடு உள்ளதால் தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய இடையூறு ஏற்படுகிறது.
செபாஸ்டியன் (தி.மு.க.,): நகராட்சிக்கு தெரிவிக்காமல் சில பணிகள் நடைபெற்று வருகிறது. படிப்பகங்களில் நாளிதழ் வாங்கி பராமரிக்க அதிக நிதி சுமை ஏற்படுகிறது.
கந்தசாமி (மார்க்சிஸ்ட்): படிப்பகங்கள் இக்காலகட்டத்தில் அவசியமானது. நாளிதழ்கள் படிக்க வேண்டும்.
செபாஸ்டின் (தி.மு.க.,): நகராட்சி பணியாளர் குடியிருப்புகள் நிலை என்ன?
நகர் நல அலுவலர்: 41 குடியிருப்புகளில் நாலு இடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
கலையரசி (தி.மு.க.,): விட்டல் நகர், அங்க முத்து வீதி பகுதிகளில் உப்புத் தண்ணீர் வருவதில்லை. குடிதண்ணீர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரம் வருகிறது. கண்ணகி ரோடு ஏசிசி ரோட்டில் குடிநீர் வருவதில்லை.
தலைவர்: குடிநீர் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
சுரேஷ் (தி.மு.க.,): வரி உயர்வால் நகராட்சிக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு?
தலைவர்: ரூ.6.54 கோடி கிடைத்துள்ளது.
தீனதயாளன் (தி.மு.க): வீடுகளை விடுதிகளாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.
தலைவர் : விடுதிகளாக செயல்படும் வீடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.