மின்சார பயன்பாடு என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நவீன தொழில்நுட்ப யுகத்தில் இதன் தேவையின்றி அணுவும் அசையாத நிலை உள்ளது. மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ள சூழலில் கடைக்கோடி கிராமங்கள் வரை மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சேதமடைந்தும் ,பராமரிப்பின்றி செடி, கொடிகள் படர்ந்து விபத்து அபாய நிலையில் உள்ளது. மாதந்திர பராமரிப்பு பணி என மின்தடை செய்த போதும் பராமரிப்பு பணி என்னவோ கண்துடைப்பாகவே நடக்கிறது. மின்கம்பங்களில் சூழ்ந்துள்ள செடி, கொடிகளை உணவுக்காக உண்ண செல்லும் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கன மழை நேரங்களில் பொதுமக்கள் அவ்வழியே கடந்து செல்லும் சூழலில் மின்விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் மக்கள் புகார் தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அதிகளவு மழை பெய்வதால் தாவரங்கள் விரைவாக வளர்ந்து எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இங்கு உயர் மின்னழுத்த மின்கம்பம், வீட்டு மின் இணைப்பு கம்பங்கள் என ஆயிரக்கணக்கானவை உள்ளன. இங்குள்ள மின்கம்பங்களில் செடிகள் பற்றி விபத்து அபாயத்துடனே உள்ளன. இதனால் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு விடிய, விடிய மின்தடை என்ற சூழல் நிலவுகிறது. மின்வாரியம் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.