பிரச்னையின் பிடியில் 'கொடை' 3வது வார்டு
கொடைக்கானல்-குரங்குகள் தொல்லை, சாக்கடை இன்றி அவதி, பட்டா, வீட்டு வரி இல்லாத சூழல், சரிவர எரியாத தெருவிளக்குகள், அள்ளப்படாத குப்பை, குடிநீர் லைன் இல்லாத அவலம் என கொடைக்கானல் நகராட்சி 3 வது வார்டில் பிரச்னைகள் கொடிகட்டி பறக்கின்றன.
கொடைக்கானலில் உயரமான புதுக்காடு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் கீழ் புதுக்காடு பகுதியான மாசாணி அம்மன் கோயில் தெருவில் உள்ள சிறிய கிணற்றை சீரமைத்து தர நகராட்சியிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. மாறாக மக்களையே சீரமைத்து கொள்ளுங்கள் என்கின்றனர்.
மின்தடை பிரச்னையால் அவதிப்படுவதோடு மின்னழுத்த குறைபாட்டால் வீட்டில் உள்ள உயர் மின்னழுத்த சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. கீழ் புதுக்காடு பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்துள்ள மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை விடுத்தும் அகற்றவில்லை. அவசர காலகட்டங்களில் நோயாளிகளை கொண்டு செல்ல இப்பகுதியில் வாகனங்கள் வரமுடியாத நிலை உள்ளது. குடிநீர் தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள இந்த வார்டில் குடிநீர் பைப் லைன்கள் வழங்காததால் இங்குள்ளோர் வெகு தொலைவில் இருந்து குடிநீர் எடுத்து வரும் அவலம் உள்ளது.
விளக் குகள் எரிவதில்லை
கிருஷ்ணகுமாரி, குடும்பத்தலைவி : கீழ் புதுக்காடு பகுதியான மாசாணி அம்மன் கோயில் பகுதியில் குடிநீர் இணைப்பு இன்றி ,அருகில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் எடுத்து நாள்தோறும் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். தெருவிளக்குகள் எரியாத நிலை உள்ளது.
மழை நேரத்தில் தாழ்வான பகுதியாக உள்ள இங்கு கழிவு நீர் தேங்கி ரோட்டில் நடக்க முடியாத அவலம் உள்ளது. சாக்கடை சேதம், ரோடுகளும் சேதமடைந்து இருப்பதால் இரவு நேரங்களில் தடுமாறும் நிலை உள்ளது.
கவுன்சிலர் வருவதில்லை
ரவி, வியாபாரி: ஏராளமானோருக்கு பட்டா இல்லாத நிலை உள்ளது. வீட்டு வரி உள்ளிட்ட வரியினங்கள் இல்லாததால் அவதிப்படுகின்றனர். குப்பை அள்ளாததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு கீழ் புதுக்காடு பகுதியில் இல்லாததால் சிரமப்படுகின்றனர். வார்டில் குரங்குகள் தொல்லையால் குடியிருப்பு வாசிகள் அவதிபடுகிறோம். கவுன்சிலர் வார்டுக்கு வருவதில்லை.
ரோட் டோ ரம் ஆக் கிரமிப்பு
அப்பாஸ், வியாபாரி: புதுக்காட்டு பகுதி செல்லும் ரோட்டோரம் பழுதடைந்த ஆட்டோக்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளனர். இங்குள்ள கூட்டுறவு கிட்டங்கிக்கு நாள் தோறும் ஏராளமான லாரிகள் வந்து செல்லும் நிலையில் ரோடு சேதம் அடைந்து விபத்தை ஏற்படுத்துகிறது. பைக்கில் செல்லும் போது தடுமாறும் நிலை உள்ளது. காட்டுமாடு நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
ரோடைசீரமைக்க நடவடிக்கை
ஜோதிமணி, கவுன்சிலர், (தி.மு.க.,): ரூ. 30 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. குரங்குகள் அதிகரித்துள்ளதால் அதை பிடிக்க வனத்துறையிடம் கூறப்பட்டுள்ளது. 9வது குறுக்குத் தெருவில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. மின்னழுத்த குறைபாட்டை சீர் செய்ய புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வார்டில் உள்ள குறைபாடுகளை நாள்தோறும் கேட்டறிந்து வருகிறேன்.