பண்ருட்டி : பண்ருட்டி அருகே 2 வீடுகளில் நகைகள் மற்றும் பட்டுப் புடவைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 37. இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஆறரை சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.
தொடர்ந்து, அருகில் உள்ள ராமதாஸ், 60; என்பரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த பட்டு புடவைகள் திருடி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.