திட்டக்குடி : திட்டக்குடி அருகே மின் கம்பத்தில் சாய்ந்த புளியமரத்தை அகற்றக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் நேற்று மாலை 5:30 மணியளவில் தனியார் திருமண மண்டபம் அருகே சாலையில் புளியமரம் ஒன்று முறிந்து விழுந்தது. அந்த மரத்தை பொதுமக்களே அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
அதன்பின் மாலை 6:00 மணிக்கு, பஸ் நிறுத்தம் அருகே இருந்த புளியமரம் ஒன்று, அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது சாய்ந்தது. இதனால் அச்சமடைந்த பொது மக்கள், மரத்தை அகற்றக்கோரி 6:45 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திட்டக்குடி போலீசார் நேரில் சென்று, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 7:00 மணிக்கு, கலைந்து போகச்செய்தனர். தொடர்ந்து திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், டி.எஸ்.பி.,காவ்யா முன்னிலையில் மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, போலீசார் மின்கம்பத்தில் சாய்ந்த மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் 40 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. புளியமரம் அகற்றப்பட்ட பின், 8.40 மணிக்கு போக்குவரத்து சீரானது.