வடலுார் : வடலுாரில் புதிய பஸ் நிலையம் அமைத்தல் தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
வடலுார் நகராட்சியில் ரூ. 5 கோடியே 85 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இது குறித்து வணிகர்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி சேர்மன் சிவக்குமார் தலைமை தாங்கினார். கமிஷனர் பானுமதி முன்னிலை வகித்தார்.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையினை நிலுவையின்றி உடன் செலுத்தி கடையினை, நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். இம்மாத இறுதிக்குள் நிலுவையின்றி வாடகை தொகையினை செலுத்துபவர்களுக்கு புதிய பஸ் நிலையத்தில் கடையில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
நகர செயலாளர் தமிழ்செல்வன், நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், மேலாளர் (பொ) முத்துராமன், சுகாதார ஆய்வாளர் பாக்கியநாதன், வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.