கடலுார் : கடலுார் அரசு மருத்துவமனையில்முறையான சிகிச்சை அளிப்பதில்லைஉள்ளிட்ட அடுக்கடுக்கான புகாரால்,கலெக்டர் அதிரடி ஆய்வு நடத்தி, டாக்டர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டார்.
கடலுாரில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 1907ம் ஆண்டு துவங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்தும் தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். 750 படுக்கை வசதி உள்ளது.
மகப்பேறு மருத்துவமனையில் தினமும் 25 குழந்தைகளுக்கு குறையாமல் பிறக்கின்றன. ஆனால், இங்கு, நரம்பியல் மற்றும் இருதயம் என, உயர் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை.
இதனால் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி, சென்னை மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படும் நிலை உள்ளது.
எனவே, கடலுார் அரசு தலைமை மருத்துவமனை பெயரளவில்தான் செயல்படுகிறது. சளி, காய்ச்சலுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க கூடிய ஆஸ்பத்திரியாக செயல்படுகிறது.
டாக்டர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை. இரவு நேரங்களில் பயிற்சி டாக்டர் மட்டுமே பணியில் உள்ளனர்.
தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், இரவு நேரத்தில் முக்கிய டாக்டர்களை பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இது தொடர்பான மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்திலும் கவுன்சிலர்கள் புகார் எழுப்பினர்.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் திடீரென தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.
அப்போது, பணியில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் பணியில் இருந்தார். காலை 9:00 மணி வரையில் டாக்டர்கள் வராததால் கடுப்பான அவர், இந்நிலை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துவிட்டு சென்றார்.
இதுகுறித்து அவர், கலெக்டரை தொடர்பு கொண்டு மாவட்டம் முழுவதும் மருத்துவமனைகளை கண்காணிக்க அறிவுறுத்தினார்.
அடுத்தடுத்த புகாரின்பேரிலும், அமைச்சரின் அறிவுறுத்தல் காரணமாகவும் நேற்று பகல் 12:00 மணியளவில், கலெக்டர் பாலசுப்ரமணியம் கடலுார் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புற நோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் இடத்தில் பணியில் இருந்த ஊழியரிடம் தினமும் எத்தனை நோயாளிகள் வருகின்றனர். சிகிச்சைக்கு வருவோர் குறித்த பதிவேடு பராமரிக்கப்படுகிறதா, நோயாளிகளுக்கு சரியான முறையாக மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறதா, போதுமான அளவில் மருந்துகள் இருப்பு உள்ளதா என, கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் அனைத்து பிரிவிற்கும் சென்ற கலெக்டர், அங்கிருந்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள், கடலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.
அப்போது, டாக்டர்கள் அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும். நோயாளிகளுக்கு உரிய முறையில் பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வு குறித்து கலெக்டர் கூறுகையில், 'நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகிறதா, மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளதா, வார்டுகள் அனைத்தும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, வார்டுகளில் உள்ள நோயாளிகளை டாக்டர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கிறார்களா உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
டாக்டர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என்ற புகார் வந்தது. அது சம்பந்மாக ஆய்வு செய்யப்பட்டது' என்றார். அரசு மருத்துவமனையில் கலெக்டரின் அதிரடி ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியது.