புதுச்சேரி அரசு துறைகள் மீதான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் 31 மார்ச் 2021 அன்றுடன் முடிந்த தணிக்கை அறிக்கை சட்டசபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
குடிநீர் வினியோகம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஜி.எஸ்.டி.,தணிக்கை குறித்து மாநில முதன்மை கணக்காய தலைவர் ஆனந்த் கூறியதாவது:
பொதுப்பணித் துறை நீண்டகால,முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைத் தயாரிக்காததால், பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்க்க முடியவில்லை.
குடிநீர் வழங்குதலை அதிகரிக்க ஏரி, குளம் போன்ற நீர் வள ஆதாரங்கள் கருத்தில் கொள்ளவில்லை. மழைநீர் சேகரிப்பு அமைப்புமுறை செயல்படுத்துவதில் குறைபாடு உள்ளது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்படாததால், தண்ணீர் இரண்டாம் நிலை உபயோகமின்றி வீணடிக்கப்பட்டதாலும், 15.7 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக்கப்பட்டதாலும், ரூ. 8.02 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகளுக்கு விடுவிக்கப்பட்ட ரூ. 75.29 கோடி மூன்று ஆண்டுகளாக வங்கியில் வைக்கப்பட்டதால், அடையாளம் காணப்பட்ட வசதிகள் ஏற்படுத்தவில்லை. 2016--21 வரையிலான காலகட்டத்தில், ரூ. 212.65 கோடி மதிப்பில் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்ட 13 புதிய பணிகளும், காரைக்காலில் ஒரு பணியும் முடிவு பெறவில்லை. அல்லது தவிர்த்திருக்கக்கூடிய தாமதத்துடன் நிறைவு பெற்றுள்ளது.
இதேகாலகட்டத்தில் மொத்தமுள்ள 13 தரைமட்ட நீர்த்தேக்கங்களில் ஒன்றில் மட்டுமே பொதுப்பணித் துறை துார் வாரும் பணியை மேற்கொண்டது. நீர்த்தேக்கங்கள் துார் வாராதது மற்றும் ஆற்றல் செயல்திறன் கொண்ட தண்ணீர் விசைக்குழாய்கள் நிறுவாதது போன்றவற்றால் நீர் விநியோக மேலாண்மை பாதிக்கப்பட்டது.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 7.66 கோடி இழப்பு ஏற்பட்டது.
குளோரின் கலக்காத குடிநீர் வழங்கப்பட்டது. ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் வழங்கப்பட்டது. மேல்நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்யாதது மற்றும் அதிக அளவு மொத்த கரைந்த திண்மப்பொருட்கள் (TDS) ,குளோரைடு தன்மை (Chioride) ஆகியவை இருப்பது போன்ற காரணங்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் தரம் குறைவாக இருந்தது. பொதுமக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய தண்ணீர் கட்டணம் ரூ. 49.44 கோடி நிலுவையில் இருந்தது.
இரண்டு சாலைப் பணிகள் தொடா்பான, விலை குறைந்த ஒப்பந்தப்புள்ளியை நியாயமற்ற முறையில் நிராகரித்ததால், மறுஒப்பத்தப் புள்ளியில் ரூ.63.37 லட்சம் தவிர்த்திருக்க கூடிய கூடுதல் செலவீனம் ஏற்பட்டுள்ளது,
ஊசுடு தொகுதியில் வசிப்பவர்களுக்கு கட்டட திட்ட அனுமதியின்றி சமுதாயக்கூடம் கட்டும் பணி வழங்கியது மற்றும் சிக்கலற்ற இடத்தை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கத் தவறியது ஆகியவற்றால் நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதில் ரூ. 43.08 லட்சம் வீணான செலவினம் ஏற்பட்டுள்ளது.
ரெட்டியார்பாளையத்தில் வீடுகள் கட்டுமான திட்டத்தை முடிப்பதில் ஏற்பட்ட அளவு கடந்த காலதாமதததால் 464 குடியிருட்புகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் ரூ. 16.44 கோடி பயனற்ற முதலீட்டில் முடிந்துள்ளது.
மாகியில் கடலோர காவல் நிலையம் கட்டப்படாததால் ரூ. 81.86 லட்சம் நிதி முடக்கப்பட்டதோடுகடலோரப் பாதுகாப்பும் கேள்விகுறியானது என குறிப்பிட்டுள்ளது.
சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், அரசு துறைகளின் மீது பல்வேறு காலதாமதம், நிதி வீணடிப்புகளை தணிக்கை அறிக்கை சுட்டி காட்டியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தணிக்கை அறிக்கையில், பிரதம மந்திரி வீட்டு வசதி நகர்ப்புற திட்டத்தில் 44,315 பயனாளிகள் பயன்பெற தகுதியுடையவர் எனக் கண்டறியப்பட்டது. இருப்பினும், இரு அலகுகள் செயல்படுத்தாததால் 16,013 பயனாளிகளுக்கு திட்டப் பலன்கள் மறுக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் தேர்வில், விண்ணப்பங்கள் முறையாக கூர்ந்தாய்வு செய்யாததால் 2,120 பயனாளிகள் நீக்கப்பட்டனர் எனக் கூறப்பட்டுள்ளது.