விழுப்புரம், கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ௩ பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த வரகுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி அஞ்சலி, 36; இவர் நேற்று மாலை 4:30 மணிக்கு அதே பகுதியில் உள்ள அவரது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்பகுதியில் மின்னல், இடியுடன் மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் அஞ்சலி படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.
உடன், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அஞ்சலி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த தின்னனுாரைச் சேர்ந்த ஏழுமலை, 50; அவரது மனைவி நீலா, 40; ஆகிய இருவரும் அதே பகுதியில் வயலில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில், இருவரும் படுகாயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திண்டிவனம், பூதேரி பகுதியில் நேற்று மாலை 4.00 மணிக்கு மின்னல் தாக்கியதில் முகமது மீரான் என்பவர் வீட்டில் இருந்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
செஞ்சி
செஞ்சி, சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5:00 மணியளவில் மின்னல், இடியுடன் மழை பெய்தது. அப்போது செஞ்சி கோட்டை கிருஷ்ணகிரி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தில் பெண்கள் நடவு பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் தாக்கியதில், செஞ்சி, பீரங்கிமேட்டைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி சற்குணம், 34; ராஜகோபால் மனைவி உமா, 52; ஆகிய 2 பேர் மயங்கி விழுந்தனர். இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இருவரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மயிலம்
பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மனைவி ரஞ்சிதம், 65; நேற்று மாலை கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பெய்த மழையின் போது திடீரென மின்னல் தாக்கியதில், மயக்கமடைந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ரஞ்சிதம் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், பெருமாள் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் அன்பு, 38; கடை வீதியில் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று மாலை வாணாரபுரம் சென்று தேங்காய் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலுார் திரும்பிக் கொண்டிருந்தார். மாலை 6:00 மணி அளவில் கரடி கிராமம் அருகே வந்தபோது, மழை பெய்தது. அதனால் சாலையோர புளிய மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றார். எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அன்பு உயிரிழந்தார்.
தகவல் அறிந்த திருக்கோவிலுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.