கடலுார் : கடலுார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து, நள்ளிரவில் மரத்தில் ஏறி குதித்து 6 சிறுவர்கள் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலுார் அடுத்த எஸ்.என்.சாவடி கெடிலம் ஆற்று சாலையில், அரசு சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளி (சிறார் கூர்நோக்கு இல்லம்) செயல்பட்டு வருகிறது. குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட, 18 வயதிற்குட்பட்ட 13 சிறுவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு உணவுக்குப் பிறகு சிறுவர்களை அறையில் தங்க வைத்துவிட்டு, வார்டன் சிவா இரவு காவல் பணியில் இருந்தார்.
அனைவரும் துாங்கிய பிறகு, திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, கடலுார் கூத்தப்பாக்கம், சிதம்பரம் அடுத்த கிள்ளை, திருவண்ணாமலை ஊசம்பாடி, சிதம்பரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 15 முதல் 17 வயதுடைய 6 சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, கடலுார் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை ரயில்வே கேட் ரோந்து பணியில் இருந்தார். அப்போது, சந்தேகப்படும்படி இரு சிறுவர்கள் அந்த வழியாக சென்றனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்.
இருவரும் சிதம்பரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பியதும், அவர்களுடன் சேர்ந்து மொத்தம் 6 பேர் வேப்ப மரத்தில் ஏறி மதிற்சுவர் வழியாக குதித்து தப்பி சென்றதாக தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த டி.எஸ்.பி., உடனடியாக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றார்.
அப்போதுதான், அங்கிருந்து சிறுவர்கள் தப்பிய விவரம், இல்லத்தின் இரவு காவலருக்கு தெரியவந்தது.
அதேபோல, சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிய கிள்ளை மற்றும் திட்டக்குடி ஆவினங்குடியை சேர்ந்த இரு சிறுவர்கள், கிள்ளை அருகே ரோந்து பணியிலிருந்த போலீசாரிடம் பிடிபட்டனர்.
இதுகுறித்து சீர்திருத்த பள்ளி கண்காணிப்பாளர் கணபதி கொடுத்த புகாரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்தனர். தப்பியோடிய 6 பேரில் நால்வர் பிடிபட்ட நிலையில், கூத்தப்பாக்கம் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த இரு சிறுவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சீர்திருத்த பள்ளியில் உயரமான மதிற்சுவர்கள், பாதுகாப்பான இரும்பு கேட்டுகள் இருந்தும், பாதுகாவலர்களின் கண்காணிப்பு குறைபாடு காரணமாக அடிக்கடி அங்கிருந்து சிறுவர்கள் தப்பிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.