விழுப்புரம் : மயிலம் அருகே இரு தரப்பினர் மோதல் வழக்கில் ஊராட்சி தலைவர் உட்பட 5 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் கோர்ட் தீர்ப்பளித்தது.
விழுப்பும் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கீழ்எடையாளம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் மனைவி சாந்தா, 23; அதே பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இரு தரப்பினருக்குமிடையே தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.
இதன் காரணமாக மனோகரன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த 15 பேர் சேர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி சாந்தாவின் வீட்டிற்குள் புகுந்து, அவரது குடும்பத்தினரை தாக்கி வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து, சாந்தா அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் மனோகரன் உட்பட 15 பேர் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிந்தனர்.
இவ்வழக்கில் மனோகரன், பாலு, சரவணன், சதீஷ், முரளி, மணிமாறன், பிரேம், விமல், பரந்தாமன், அன்பு, செந்தில், சத்யராஜ், ஜெயப்பிரகாஷ், பாரதிராஜா, ராமு ஆகிய 15 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில், விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட மனோகரன், பாலு, சரவணன், சதீஷ், முரளி ஆகிய 5 பேருக்கு தலா 3 ஆண்டு சிறையும், தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மற்ற 10 பேருக்கும் தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மனோகரன், கீழ்எடையாளம் ஊராட்சி தலைவராக உள்ளார்.