விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி முன்னாள் பணி மேற்பார்வையாளரைத் தாக்கிய வழக்கில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த தமிழக உள்துறை அலுவலகம் அரசாணை வெளியிட்டுள்ளது.
விழுப்புரம், சாலாமேடைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். ஆரணி நகராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2008ம் ஆண்டு விழுப்புரம் நகராட்சியில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். அப்போது, நகராட்சி ஊழியர்களுக்கும், ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த குமார், ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் விசாரணை நடத்தியபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ராமலிங்கம் என்பவரை தாக்கியதாகக் கூறி ஜெயப்பிரகாஷ் நாராயணன் மீது வழக்குப் பதிந்து, அன்று இரவு அவரது வீட்டிற்குள் புகுந்து கைது செய்தார்.
இதை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஜெயப்பிரகாஷ் நாராயணன், சப் இன்ஸ்பெக்டர் குமார் மீது மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் 2009ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஏட்டு ராமலிங்கம், அப்போதைய இன்ஸ்பெக்டர் மணி ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். வழக்கை விசாரித்த ஆணையம் கடந்த 2019ல் தீர்ப்பு வழங்கியது.
அதில், பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டினை சப் இன்ஸ்பெக்டர் குமார், இன்ஸ்பெக்டர் மணி ஆகியோரின் சம்பளத்திலிருந்து தலா 2 லட்சமும், ஏட்டு ராமலிங்கத்திடமிருந்து ஒரு லட்சம் ரூபாயும் பெற்று வழங்க வேண்டும்.
குமாருக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போதே இன்ஸ்பெக்டர் மணி, ஏட்டு ராமலிங்கம் ஓய்வுபெற்று விட்டனர். குமார் மட்டும் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இதற்கிடையே மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் குமார் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்ஸ்பெக்டர் குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்தும், மாநில மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழக உள்துறை அலுவலகம் அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். குமாரின் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கு தடை விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.